கோவை
சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
இந்த மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
என்ஜினீயர்
கோவை சேரன்மாநகர் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 31), என்ஜினீயர். இவருக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் ஆன்லைன் மூலம் வெளிநாட்டில் வேலை கிடைக்குமா என்று தேடி வந்தார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அவருடைய செல்போன் வாட்ஸ்-அப் எண் ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. உடனே அவர் அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் காலில் தொடர்பு கொண்டு பேசினார்.
ரூ.6½ லட்சம் செலுத்தினார்
எதிர்முனையில் பேசிய நபர், உங்கள் படிப்புக்கு ஏற்ற வேலை சிங்கப்பூரில் உள்ளது. ஆனால் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார். அதை நம்பிய கிருஷ்ணமூர்த்தி, அந்த நபர் கூறிய எண்ணுக்கு ஆன்லைன் மூலம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.6 லட்சத்து 55 ஆயிரம் செலுத்தி உள்ளார்.
ஆனால் அதன்பிறகும் அந்த நபர் வேலை வாங்கி கொடுக்க வில்லை. இது தொடர்பாக அந்த நபரிடம் பேசிய போது, விரைவில் வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளார். ஆனால் சில நாட்கள் கழித்து அந்த நபரை கிருஷ்ணமூர்த்தி தொடர்பு கொண்ட போது பதில் அளிக்காமல் இருந்து உள்ளார்.
விசாரணை
இதனால் தான் ஏமாற்றப்பட்டது குறித்து கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் வழக்குப்பதிவு செய்தார். மேலும் கிருஷ்ணமூர்த்தியிடம் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நபர் யார்? இதில் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.