பட்டா மாறுதல் செய்ய ரூ.4500 லஞ்சம்; கிராம நிர்வாக அலுவலர் கைது

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே பட்டா மாறுதல் செய்து கொடுக்க ரூ.4500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-13 18:45 GMT

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே பட்டா மாறுதல் செய்து கொடுக்க ரூ.4500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

பட்டா மாறுதல்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளம் அருகேயுள்ள கீரனூர் கிராமத்துக்கு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் கார்த்திகேயன் (வயது 46). இவர் கூடுதல் பொறுப்பாக 3.கூத்தனூர் கிராமத்துக்கான கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பையும் ஏற்று கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் கூத்தனூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். அதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் ரூ.4500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

ரசாயனம் தடவிய நோட்டுகள்

இதுகுறித்து ஆறுமுகம் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதன்பேரில் நேற்று லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆறுமுகத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளனர்.

அதனை பெற்றுக்கொண்ட ஆறுமுகம் கீரனூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கார்த்திகேயனை கைது செய்தனர். மேலும் கார்த்திகேயன் வேறு நபர்களிடம் லஞ்சம் வாங்கியுள்ளாரா அல்லது ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்