ரூ.4 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடி; 4 பேர் கைது அமலாக்கத்துறை நடவடிக்கை

ரூ.4 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடியில் 4 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Update: 2022-07-13 20:59 GMT

சென்னை,

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம், சுரானா பவர் லிமிடெட் மற்றும் சுரானா கார்ப்பரேசன் லிமிடெட் ஆகியவை கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பல்வேறு வங்கிகளிடம் இருந்து ரூ.4 ஆயிரம் கோடியை கடனாக பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் ரூ.1,301.76 கோடியும், சுரானா பவர் லிமிடெட் ரூ.1,495.76 கோடியும், சுரானா கார்ப்பரேசன் லிமிடெட் ரூ.1,188.56 கோடியும் வங்கிகளில் கடன் பெற்றதும், அந்த தொகையை திருப்பிச்செலுத்தாமல் மோசடி செய்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

4 பேர் கைது

இந்தநிலையில், அந்த கடன் தொகையை சட்டவிரோத பணப்பரிமாற்றத்துக்கு பயன்படுத்தியதாக சுரானா நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா மற்றும் நிறுவன ஊழியர்கள் ஆனந்த், பிரபாகரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்தது.

அதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர்.

அவர்களை வருகிற 27-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்