மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கும் திட்டம்; அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

தென்காசி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-15 20:59 GMT

தென்காசி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

மகளிர் உரிமைத்தொகை திட்டம்

தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ெபண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் இதற்கான விழா தென்காசி ஐ.சி.ஐ. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி வரவேற்று பேசினார்.

எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ராஜா, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அப்போது சாதிர் நகர்மன்ற தலைவருக்காக வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.30 ஆயிரத்துக்கான காசோலையை முதல்-அமைச்சரின் நிவாரண தொகைக்காக வழங்கினார்.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

விழாவில் சிறப்பு அழைப்பாளராக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க. கூறியது போன்று தாய்மார்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் இன்று (அதாவது நேற்று) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்றே (நேற்று முன்தினம்) தாய்மார்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டு விட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாய்மார்கள் மீது மிகுந்த அன்பு வைத்து அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் இந்த திட்டம் மகத்தானது ஆகும். இதன்மூலம் தாய்மார்களுக்கு பொருளாதார வசதி பெருகும். தங்களது சொந்த காலில் நிற்க முடியும். இதுபோன்று மேலும் பல நல்ல திட்டங்கள் தொடர வேண்டும். எனவே இந்த அரசுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

3 லட்சத்து 60 ஆயிரம் பேர்

கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் பேசும்போது 'இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் பயன் அடைகிறார்கள். ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி தாய்மார்களின் வங்கிக்கணக்கில் இந்த தொகை வரவு வைக்கப்படும்' என்றார்.

விழாவில் தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், தென்காசி யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா, தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, தொண்டரணி துணை அமைப்பாளர் சுரேஷ், இலஞ்சி நகர பஞ்சாயத்து துணைத்தலைவர் முத்தையா, மேலகரம் செயலாளர் சுடலை, ஆலங்குளம் யூனியன் தலைவி திவ்யா மணிகண்டன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தென்காசி உதவி கலெக்டர் லாவண்யா நன்றி கூறினார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்