போலியான நில ஆவணங்களை காட்டி ரூ.71 லட்சம் மோசடி: கணவன்-மனைவி கைது

சென்னையில் போலியான நில ஆவணங்ளை காட்டி ரூ.71 லட்சம் மோசடியில் ஈடுபட்ட புகாரில் கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-18 20:56 GMT

சென்னை,

சென்னையைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

வேளச்சேரி ராமகிரிநகர் பகுதியில் உள்ள 5 வீடுகளை நேரில் பார்வையிட்டு அவற்றை வாங்க நான் முடிவு செய்தேன். அந்த 5 வீடுகளுக்கும் ரூ.2.10 கோடி என்று விலை பேசி முடிவு செய்யப்பட்டது. அதற்காக அட்வான்ஸ் தொகையாக ரூ.71 லட்சம் கொடுத்தேன். ஆனால் வீடுகளுக்கான பட்டா ஆவணம் வேறொருவர் பெயரில் இருந்தது. போலியான பட்டா ஆவணம் மூலம் மேற்கண்ட வீடுகளை விற்க திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர்.

மேலும் எனக்கு மேற்படி அந்த 5 வீடுகளையும் பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் இழுத்தடித்தனர். என்னிடம் வாங்கிய ரூ.71 லட்சம் அட்வான்ஸ் பணத்தையும் திருப்பித்தராமல் மோசடி நோக்கில் செயல்படுகிறார்கள். இது தொடர்பாக முறையாக சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கணவன்-மனைவி கைது

இந்த புகார் மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க, சென்னை மத்திய குற்றப்பிரிவின், ஆவண மோசடி தடுப்பு போலீசாருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி, துணை கமிஷனர் மீனா, உதவி கமிஷனர் ஜான்விக்டர் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மேனகா இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மோசடியில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த பிரியா விஷா (வயது 38), அவரது கணவர் ஷாகுல்ஹமீது (58) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்