பால்பண்ணை அமைப்பதாக முதலீட்டு தொகை பெற்று ரூ.4.81 கோடி மோசடி: தந்தை-மகன் கைது
திருமுல்லைவாயல் அருகே பால்பண்ணை அமைப்பதாக முதலீட்டு தொகை பெற்று ரூ.4.81 கோடி மோசடி செய்ததாக தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருமுல்லைவாயல் அருகே உள்ள காட்டூர் பகுதியில் கறவை மாடுகள் மூலம் பெரிய அளவில் பால்பண்ணை அமைத்து, நல்ல பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைகாட்டி ரூ.4.81 கோடி மோசடி செய்து விட்டதாக தனியார் நிறுவனம் ஒன்றின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
சென்னை விருகம்பாக்கத்தைச்சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 25 பேரிடம் முதலீட்டு தொகை பெற்று மேற்கண்ட மோசடி அரங்கேற்றப்பட்டதாக புகாரில் குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட சென்னை கொளத்தூரைச்சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 67), அவருடைய மகன் மகேஷ்குமார் (40) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். குஜராத்தில் இருந்து கறவை மாடுகள் வாங்குவதாக கூறினார்களாம். ஆனால் அதுபோல கறவை மாடுகள் எதுவும் வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுபோன்ற நூதன மோசடி வலைகளில் சிக்கி பொதுமக்கள் ஏமாறக்கூடாது என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.