டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.4¾ லட்சம் கொள்ளை

இலுப்பூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.4¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2023-09-18 22:49 IST

டாஸ்மாக் கடை

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே மலைக்குடிபட்டி- தென்னலூர் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு கடையின் ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக வியாபாரமான பணத்தை லாக்கரில் வைத்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் இன்று காலை அப்பகுதி வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் இதுகுறித்து இலுப்பூர் போலீசாருக்கும், கடையின் மேற்பார்வையாளருக்கும் தகவல் தெரிவித்தனர்.

ரூ.4¾ லட்சம் கொள்ளை

இதையடுத்து இலுப்பூர் போலீசார் மற்றும் கடை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கடையின் உள்ளே சென்று பார்த்த போது, லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 390-ஐ மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் சம்பவ இடத்திற்கு இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்ரி விரைந்து வந்து விசாரணை நடத்தினார். புதுக்கோட்டையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர்.இதைத்தொடர்ந்து போலீசார் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைக்கும் காட்சி பதிவாகியிருந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் துரைராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையின் பூட்ைட உடைத்து ரூ.4¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்