ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.27 லட்சம் மோசடி

2 பெண்கள் உள்பட 3 பேரிடம் அரசு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.27 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-08 18:19 GMT

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக...

புதுக்கோட்டை மாலையீடு பகுதியை சேர்ந்தவர் ஹேமமாலினி (வயது 48). இவர் தனியார் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிற நிலையில் 2017-ம் ஆண்டு டெட் தேர்வு எழுதி உள்ளார். இந்த நிலையில் பொன்னமராவதியை சேர்ந்த துரைராஜ் என்பவர் மூலம் சென்னை செந்நீர்குப்பத்தை சேர்ந்த ஹேமந்த்குமார் (38) ஹேமமாலினிக்கு அறிமுகமானார். அவர் அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ஹேமமாலினியிடம் ரூ.9 லட்சம் பணம் வாங்கியுள்ளார்.

சென்னையை சேர்ந்தவர் கைது

மேலும் 2 பேரிடம் தலா ரூ.9 லட்சம் பணம் வாங்கியிருக்கிறார். ஆனால் 3 பேருக்கும் அரசு ஆசிரியர் வேலை வாங்கி தராமல் ஹேமந்த்குமார் மோசடி செய்திருக்கிறார்.

மேலும் பணத்தை அவர்கள் திருப்பி கேட்டதற்கு கொடுக்காமல் ஏமாற்றினார். ரூ.27 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக ஹேமமாலினி புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாரிமன்னன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் ஹேமந்த்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்