வேலை வாங்கி தருவதாக ரூ.25¼ லட்சம் மோசடி: டெல்லியை சேர்ந்த மேலும் 5 பேருக்கு தொடர்பு

வேலை வாங்கி தருவதாக ரூ.25¼ லட்சம் மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை கைது செய்ய சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Update: 2022-08-28 21:19 GMT

நாகர்கோவில்:

வேலை வாங்கி தருவதாக ரூ.25¼ லட்சம் மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை கைது செய்ய சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மோசடி

சுசீந்திரம் ஆண்டார்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் செல்போனில் சிலர் கடந்த 2016-ம் ஆண்டு தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் விமான நிலைய பராமரிப்பு வேலை வாங்கி தருவதாக கூறியிருக்கிறார்கள். அதை நம்பிய அவர், அதற்காக அவர்கள் கேட்ட பணத்தை பல தவணைகளில் மொத்தம் ரூ.25 லட்சத்து 27 ஆயிரத்தை ஒரு வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் அவர்கள் கூறியபடி வேலையும் வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித்தரவில்லை. மேலும் அந்த ஆசாமிகள் கூறிய நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது அது போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

வாலிபர் கைது

இதையடுத்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வசந்தி, சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஜெனிப் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, பாதிக்கப்பட்ட நபரிடம் மோசடி செய்த ஆசாமிகள் டெல்லியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டெல்லி விரைந்து சென்று இதில் தொடர்புடைய டெல்லி ராமவிகார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (வயது 21) என்பவரை கைது செய்து நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இதேபோல பலரிடம் ஆன்லைன் மூலம் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் 5 பேருக்கு தொடர்பு

இந்த மோசடியில் ஆகாசின் கூட்டாளிகள் 5 பேருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 5 பேரும் டெல்லியில் வசித்து வருவதும், அவர்களில் 2 பேர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. அவர்களையும் கைது செய்ய சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்