சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-09-25 13:33 GMT

கோப்புப்படம் 

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

திருச்செந்தூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும் வழியில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், மேட்டத்தூர் கிராமம், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் J.S.நகர் அருகில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் TN73 M 8384 என்ற பதிவெண் கொண்ட வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் ராணிப்பேட்டை மாவட்டம், மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரவி (வயது 60) த/பெ.குணசேகர், செல்வம் (வயது 50) த/பெ.பச்சையப்பன், ராமலிங்கம் (வயது 50) த/பெ.குப்புசாமி, முருகன் (வயது 44) த/பெ.ராஜகோபால், துரை (வயது 35) த/பெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சக்தி (வயது 20) த/பெ.மகேந்திரன் ஆகிய 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்