ரூ.18 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள்

ராசிபுரம் அருகே அணைப்பாளையம் திட்டப்பகுதியில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.;

Update:2022-06-11 00:29 IST

ராசிபுரம்:

208 குடியிருப்புகள்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள அணைப்பாளையம் திட்டப் பகுதியில் தரை தளம் மற்றும் 3 தளங்களுடன் ரூ.18.01 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 208 புதிய குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இத்திட்டப் பகுதியில் 4 தொகுப்புகளில் 208 குடியிருப்புகள் தரைத் தளம் மற்றும் மேல் 2 தளங்களுடன் கூடிய கட்டிட அமைப்பில் கட்டப்பட உள்ளன.

ஒவ்வொரு குடியிருப்பும் தலா 27.70 சதுர மீட்டர் பரப்பளவுடன் வசிப்பறை, படுக்கையறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளை உள்ளடக்கியவைகளாக குடிநீர், மின்சார வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. குடியிருப்போர் நலச் சங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலைகள், மழைநீர் சேகரிப்பு அலகு, ஆழ்துளை கிணறுகள், தரை மட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் கழிவு நீர் சேகரிக்கும் தொட்டி ஆகிய உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

60 பயனாளிகளுக்கு

இதைத் தொடர்ந்து அணைப்பாளையம் திட்டப் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. முன்னிலையில் 46 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணையினையும், பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 60 பயனாளிகளுக்கு பணி ஆணையினையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ராசிபுரம் ஒன்றியக் குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், ராசிபுரம் நகராட்சித் தலைவர் கவிதா சங்கர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேற்பார்வை பொறியாளர் நஞ்சப்பன் மற்றும் அதிகாரிகள் தனசேகரன், சீனிவாசன், சங்கீதா, பயனாளிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்