ராணுவ வீரரின் மோட்டார் சைக்கிளில் ரூ.14 லட்சம் கொள்ளை

நெல்லை அருகே பட்டப்பகலில் ராணுவ வீரரின் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.14 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2023-10-07 20:00 GMT

ராணுவ வீரர்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன் முத்துராஜ் (வயது 32). ராணுவ வீரரான இவர் கடந்த 2-ந் தேதி விடுமுறையில் ஊருக்கு வந்தார். அங்கு அவர் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

இதற்காக நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து நேற்று முன்தினம் காலையில் சுமார் ரூ.14 லட்சத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். பணத்தை மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங் கவரில் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

ரூ.14 லட்சம் கொள்ளை

போகும் வழியில் நெல்லை அருகே தாழையூத்து பஜார் பகுதியில் ஒரு பழக்கடை முன்பு முத்துராஜ் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அங்கு அவர் பழங்கள் வாங்கி கொண்டு புறப்படும் போது, பெட்ரோல் டேங் கவரில் இருந்த பணத்தை காணவில்லை. அவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக அவர் தாழையூத்து போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

வலைவீச்சு

மேலும் வங்கியில் இருந்து பழக்கடை வரும்வரை உள்ள இடங்களில் இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்