ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி: சென்னை தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்கு
ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூடலூரை சேர்ந்த வாலிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சென்னையை சேர்ந்த தம்பதி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரெயில்வேயில் வேலை
தேனி மாவட்டம் கூடலூர் அருகே மேலக்கூடலூரை சேர்ந்த முருகன் மகன் ஸ்ரீநிவாஸ்குமார் (வயது 29). இவர், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கூடலூர் காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்தமூர்த்தி என்பவர் எனக்கு நன்கு அறிமுகமான நபர். அவர், சென்னை காட்டுப்பாக்கம் கண்ணதாசன் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிமுகம் செய்து வைத்தார்.
ராஜேந்திரன் ரெயில்வே துறையில் வேலை பார்த்து பணி ஓய்வு பெற்றுவிட்டதாகவும், பலருக்கு அவர் ரெயில்வே துறையில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.
பின்னர், ராஜேந்திரனின் மகன் பாரத் என்பவரை கூடலூரில் உள்ள தனது வீட்டுக்கு ஆனந்தமூர்த்தி வரவழைத்து, எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பாரத் ரூ.13 லட்சம் கொடுத்தால் ரெயில்வே துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறினார். அதை நம்பிய நான் வங்கிக் கணக்கு மூலம் அவருக்கு ரூ.2 லட்சத்தை அனுப்பினேன்.
ரூ.13 லட்சம் மோசடி
அதற்கு அவர் ரெயில்வே துறையில் வேலை தொடர்பாக ஒரு பணி நியமன உத்தரவை கொடுத்தார். அதை நம்பி மீதம் ரூ.11 லட்சத்தை கொடுத்தேன். பல்வேறு தேதிகளில் மொத்தம் ரூ.13 லட்சம் கொடுத்த நிலையில், என்னிடம் தந்த பணி நியமன உத்தரவு போலியானது என தெரியவந்தது.
இதுகுறித்து ராஜேந்திரனின் வீட்டுக்கு சென்று கேட்டபோது, அவரும், அவருடைய குடும்பத்தினரும் பணத்தை கொடுக்க மறுத்ததோடு, ஆட்களை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டினர். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக ராஜேந்திரன், அவருடைய மகன் பாரத், மனைவி அருணா, ஆனந்தமூர்த்தி ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.