தொழிலதிபருக்கு ரூ.500 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.12.6 கோடி மோசடி - வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது
கோவை தொழிலதிபருக்கு ரூ.500 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.12.6 கோடி மோசடி செய்த புகாரில் வங்கி மேலாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கோவை,
கோவை தொழிலதிபருக்கு ரூ.500 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.12 கோடியே 60 லட்சம் மோசடி செய்த புகாரில் தனியார் வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை பீளமேட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜன் பாபு. அவர், தனக்கு ரூ.500 கோடி கடன் வேண்டும் என்று, சென்னை அண்ணா நகர் மேற்கை சேர்ந்த சரவணனை அணுகியுள்ளார். அப்போது, வெளிநாட்டில் இருந்து தனக்கு வரும் பணத்தில் இருந்து ரூ.500 கோடியை கடனாக கொடுப்பதாக சரவணன் கூறியுள்ளார்.
இதற்கு கமிஷனாக ரூ.12 கோடியே 60 லட்சம், சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கி மேலாளர் பாலாஜியிடம் கொடுத்தால், ஒரு மணி நேரத்தில் ரூ.500 கோடி வங்கிக் கணக்கில் வந்து சேரும் என்று கூறியுள்ளார். அதை நம்பிய ராஜன் பாபு, ரூ.12 கோடியே 60 லட்சத்திற்கான காசோலையை அவரிடம் கொடுத்துள்ளார்.
ஆனால், அவர் கடனாக கேட்ட தொகை வராததால், சரவணனை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது சரவணன் முறையாக பதிலளிக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜன் பாபு, நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வங்கி மேலாளர் பாலாஜி உட்பட 3 பேரை கைது செய்தனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சரவணனை தேடி வருகின்றனர். வேறு யாரையாவது இதே போல் ஏமாற்றியுள்ளனரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.