சென்னை தொழில் அதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் பணம்-நகை கொள்ளை - 2 நேபாள ஆசாமிகள் கைது; 6 பேருக்கு வலைவீச்சு
சென்னை தொழில் அதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளை போன வழக்கில் நேபாள ஆசாமிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
சென்னை ராஜாஅண்ணாமலைபுரம், கிருஷ்ணாபுரி பிஷப்கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பன்சிதர் குப்தா (வயது 28). தொழில் அதிபரான இவர் பிரபல அகர்வால் ஸ்வீட்ஸ் உரிமையாளர் ஆவார். பாரிமுனையில் இவரது ஸ்வீட்ஸ் ஸ்டால் உள்ளது. வீட்டில் இவரது தாயார் மஞ்சு குப்தாவும் வசிக்கிறார்.
கடந்த 14-ந் தேதி அன்று காலை வழக்கம்போல, பன்சிதர் குப்தா பாரிமுனையில் உள்ள கடைக்கு போய் விட்டார். இவரது தாயாரும் வெளியில் சென்றுவிட்டார். மாலையில் இவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டின் முதல் மாடியில் உள்ள கப்போர்டு பீரோவை உடைத்து, அதற்குள் இருந்த ரூ.10 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க காசுகள், மோதிரங்கள், தங்க செயின்கள் போன்றவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.
இவர்கள் வீட்டில் கடந்த 2 மாதங்களாக, வேலை பார்த்து வந்த நேபாள வாலிபர் ராஜன் என்ற திபேந்திரா (20) என்பவர்தான் மேற்படி ரொக்கப்பணம், தங்க நகைகளை கொள்ளை அடித்து தப்பிச்சென்றது தெரியவந்தது.
கொள்ளை வாலிபர் திபேந்திரா வீட்டு வேலைகள் மற்றும் காவலாளி வேலையும் செய்து வந்தார். வீட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்து பணம், நகைகளை அள்ளிக்கொண்டு தப்பி ஓடி விட்டார். அவர் மீது அபிராமபுரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன், அபிராமபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரதீப் ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டில் விசாரணை நடத்தினார்கள்.
போலீஸ் விசாரணையில் தப்பி ஓடிய திபேந்திரா மற்றும் 7 பேர் சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த கொள்ளையர்கள் ரெயில் மூலம் தப்பிப்போகவில்லை. சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் வரை பஸ்சில் சென்று, அங்கிருந்து ரெயில் மூலம் ஐதாராபாத் போய் இருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து ரெயிலில் மேற்கு வங்காள மாநிலம் போய், நேபாளம் தப்பி போய் இருப்பது உறுதியாக கண்டறியப்பட்டது.
8 பேர் கொள்ளை கும்பலில் முக்கிய கொள்ளையன் திபேந்திரா உள்பட 6 பேர் நேபாளம் தப்பி போய் உள்ளனர். அவர்களை ரெயில் ஏற்றி அனுப்பிவிட்டு, சென்னை திரும்பிய பஜிதாமை, கைலாஷ் பகதூர் ஆகிய 2 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டனர். கொள்ளை அடித்த பணத்தில் இவர்களுக்கும் ஒரு பெரிய தொகை பங்காக கிடைத்துள்ளது.
நேபாளம் தப்பி ஓடிய 6 கொள்ளையர்களையும் பிடிக்க தனிப்படை போலீசார் நேபாளம் விரைந்துள்ளனர்.