முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாக கூறிஆசிரியரிடம் ரூ.1½ கோடி மோசடி8 பேர் மீது போலீசார் வழக்கு

முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ஆசிரியரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-02-10 18:45 GMT


சின்னசேலம்,

சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த நத்தக்கரை மேடு பகுதியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகன் விஜயன் (வயது 34). இவரும் சின்னசேலம் அடுத்த கருங்குழி கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் பாலகிருஷ்ணன் (32) ஆகிய இருவரும் சேலம் மாவட்டம் மணிவிழுந்தானில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2015 -ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்தனர்.

அப்போது பாலகிருஷ்ணன், சின்னசேலம் அடுத்த நயினார்பாளையம் மெயின் ரோட்டில் ஆன்லைன் வணிகம் நிறுவனத்தை நடத்தி வருவதாக விஜயனிடம் தெரிவித்துள்ளார்.

8 இடங்களில் கிளைகள்

இதன்பின்னர், விஜயனை அழைத்து வந்து, நிறுவனத்தையும் காண்பித்தார். அப்போது அங்கிருந்த நயினார்பாளையத்தை சேர்ந்த தொல்காப்பியன், சின்னப்பொண்ணு, திவ்ய ஜோதி, சின்னசாமி, அம்மையகரம் தங்கவேல் பெங்களூரை சேர்ந்த பொன்னம்பலம், லதா ஆகியோர் கம்பெனி இயக்குனர்கள் என்று கூறி, அவர்களை விஜயனிடம் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

அப்போது, இதுபோன்று 8 இடங்களில் கிளை அலுவலகம் உள்ளதாகவும், இங்கு முதலீடாக ரூ. 20 ஆயிரம் செலுத்தினால் இரட்டிப்பாக பணம் வரும் என்று விஜயனிடம் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதைநம்பி, விஜயன் அவரது நண்பர்கள் மற்றும் அவாகளை சார்ந்தவர்கள் என்று மொத்தம் 150 பேருடன் சேர்ந்து மொத்தம் ரூ. 1 கோடியே 60 லட்சம் பணத்தை கடந்த 2019 -ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதியிலிருந்து 2020 -ம் ஆண்டு ஜனவரி வரை கட்டிவந்துள்ளனர்.

8 பேர் மீது வழக்கு

பணத்தை பெற்றுக்கொண்ட, பாலகிருஷ்ணன் அதன்பின்னர் விஜயன் தரப்பு செய்த முதலீடு மீதான லாபத்தை கொடுக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது, அவர் சரியான பதில் அளிக்காமல் இருந்துள்ளார்.

இதன் பின்னர் தான் தான் ஏமாற்றப்பட்டது பற்றி அறிந்த விஜயன், இது குறித்து கீழ்குப்பம் போலீசில் கருங்குழி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி, இவரது மகன் பாலகிருஷ்ணன், தொல்காப்பியன், இவரது மனைவி சின்னப்பொண்ணு, பாலகிருஷ்ணன் மனைவி திவ்யஜோதி, பொன்னம்பலம், லதா, தங்கவேல் ஆகியோர் மீது புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இவர்கள் யாரிடம் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர், தற்போது எங்கு உள்ளனர் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்