பள்ளிக்கரணையில் ரவுடி சரமாரி வெட்டிக்கொலை - கஞ்சா கும்பலுடன் மோதலா? போலீஸ் விசாரணை
பள்ளிக்கரணையில் ரவுடி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கஞ்சா கும்பலுடன் ஏற்பட்ட மோதலால் கொலை நடந்ததா? என விசாரிக்கின்றனர்.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெருவில் சிலர் ஆயுதங்களுடன் மோதிக் கொள்வதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், சேலையூர் உதவி கமிஷனர் முருகேசன், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது, பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவில் உள்ள புதரில் மேடவாக்கம் புஷ்பா நகரை சேர்ந்த பிரைட் ஆல்வின் (வயது 30) என்பவர் தலை, கை, கால் ஆகிய இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். மேலும் அங்கு சற்று தொலைவில் ஆல்வினின் நண்பர் பெருமாள் (23) என்பவரும் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடியபடி கிடந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், போலீசார் ஆம்புலன்சை வரவழைத்ததையடுத்து, மருத்துவ குழுவினர் சோதனை செய்ததில் பிரைட் ஆல்வின் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் ஆல்வின் மீது நிலுவையில் உள்ளதும், அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரது உடலை போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயங்களுடன் கிடந்த பெருமாளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். கஞ்சா விற்பனை செய்வதில் பிரைட் ஆல்வினுக்கும், மணி என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கஞ்சா விற்பனை தகராறில் கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.