சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு
நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக, சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பந்தலூர்
கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் இறந்தனர். இதனால் அம்மாநில எல்லையையொட்டி உள்ள நீலகிரி மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கை எடுக்க கலெக்டர் அருணா உத்தரவிட்டார். அதன்படி, வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் மேற்பார்வையில் பந்தலூர் அருகே பாட்டவயல், தாளூர், நம்பியார்குன்னு, சோலாடி, நாடுகாணி உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, வனத்துறையினர் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட இடங்களில் இருந்து வாகனங்களில் வருபவர்களுக்கு தெர்மஸ் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன் பின்னரே நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறும்போது, நீலகிரிக்கு கேரள சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது என்றனர்.