பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை மீண்டும் தொடக்கம்
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக மின் இழுவை ரயில், மற்றும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15-ந்தேதி ரோப்கார் பெட்டி பாறையில் உரசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பராமரிப்பு பணிக்காக, கடந்த 2 நாட்களாக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது.
அப்போது, ரோப்காரில் பொருத்தப்பட்டிருந்த 8 புது பெட்டிகளை கழற்றிவிட்டு மீண்டும் பழைய பெட்டியை பொருத்தினர். பின்னர் அந்த பெட்டிகளில் அதிக எடை வைத்து, கோவில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் சோதனை செய்யப்பட்டது.
பின்பு அனைத்து செயல்பாடுகளும் திருப்த்தி அளித்ததை தொடர்ந்து மீண்டும் ரோப்கார் சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டு, ரோப்கார் சேவை தொடங்கியது. இதில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் மலைக்கோவிலுக்கு சென்று வந்தனர்.