மலை பாதையில் பாறைகள் விழுந்தன

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை பாதையில் பாறைகள் விழுந்தன. இதனால் மலை ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.;

Update:2022-11-21 00:15 IST

குன்னூர், 

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை பாதையில் பாறைகள் விழுந்தன. இதனால் மலை ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

பாறைகள் விழுந்தன

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்தது. ஒரு வாரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. தற்போது மழை பெய்யாமல், பகலில் வெயில் அடித்து வருகிறது. இருப்பினும், தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் மண் ஈரப்பதமாக உள்ளது.

இந்தநிலையில் நேற்று குன்னூர்-மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் ஹில்குரோவ்-ரன்னிமேடு ரெயில் நிலையங்களுக்கு இடையே தர்கா அருகே மலை உச்சியில் இருந்து பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் தண்டவாளம் சேதமடைந்தது. வழக்கம்போல் ரோந்து சென்ற ரெயில்வே ஊழியர் இதுகுறித்து குன்னூர் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு மலை ரெயில் புறப்பட்டு குன்னூரை நோக்கி வந்து கொண்டிருந்தது.

ரெயில் தாமதம்

தண்டவாளத்தில் பாறைகள் விழுந்ததால், மலை ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டது. மேலும் ஹில்குரோவ் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாறைகளை அப்புறப்படுத்தி, சேதம் அடைந்த தண்டவாளத்தை சீரமைத்தனர்.

அதன் பின்னர் ஹில்குரோவ் ரெயில் நிலையத்தில் இருந்து மலை ரெயில் புறப்பட்டு குன்னூருக்கு சென்றது. வழக்கமாக குன்னூர் ரெயில் நிலையத்துக்கு காலை 10.30 மணிக்கு ரெயில் வந்தடையும். ஆனால், நேற்று 1¼ மணி நேரம் தாமதமாக காலை 11.45 மணிக்கு குன்னூருக்கு வந்தது. ரெயில் தாமதம் ஆனதால், சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்