அரசு கல்லூரி விடுதியில் 'ராக்கிங்'

செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் நடைபெற்ற ராக்கிங் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-04-25 16:46 GMT

செய்யாறு

செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் நடைபெற்ற ராக்கிங் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு கல்லூரி

செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் 70 சதவீத மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த மாணவர்களின் வசதிக்காக சமூக நலத்துறை சார்பில் மாணவிகள் தங்கும் ஒரு விடுதியும், மாணவர்களுக்கென 2 விடுதிகள் என மொத்தம் 3 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பைங்கினர் அண்ணா நகர் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் விடுதியில் சுமார் 70 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

தற்போது இந்த விடுதியில் முதலாம் ஆண்டில் 19 மாணவர்களும், இரண்டாம் ஆண்டில் ஒரு மாணவரும், மூன்றாம் ஆண்டில் 8 மாணவர்களும் என்று மொத்தம் 28 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

ராக்கிங்

இந்த நிலையில் நேற்று இரவு அந்த விடுதியில் உள்ள 3-ம் ஆண்டு படிக்கும் சீனியர் மாணவர்கள், செய்ய சொன்ன பணியை, முதலாம் ஆண்டு படித்து வரும் ஜூனியர் மாணவர்கள் செய்யவில்லை என தெரிகிறது.

அதனால் ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை சாட்டை கயிறு மூலம் சாட்டையடி கொடுத்து தண்டனை வழங்கி ராக்கிங் செய்ததாக கூறப்படுகிறது.

கல்லூரி விடுதியில் மாணவர்களை சாட்டையடி கொடுத்து ராக்கிங் செய்த கொடுமைகள் குறித்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவ தொடங்கியது.

இது குறித்த தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் கலைவாணி, ராக்கிங் சம்பவத்தில் தொடர்புடைய மூன்றாம் ஆண்டு பயிலும் 8 மாணவர்களை வரவழைத்து கல்லூரி துறை பேராசிரியர்கள் மூலம் விசாரணை நடத்தினார்.

போலீசார் விசாரணை

மேலும், ராக்கிங் தகவலை மாணவர்களின் பெற்றோர்களுக்கு போன் மூலம் தெரிவித்து, கல்லூரிக்கு பெற்றோர்களை அழைத்து வரும்படி மாணவர்களிடம் அறிவுறுத்தினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு போலீசார்  விடுதிக்கு வந்து விடுதி வார்டன் வேட்டவலம் ரவி மற்றும் விடுதியில் தங்கியுள்ள ஒவ்வொரு மாணவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் செய்யாறில் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு கலைக் கல்லூரி எஸ்.சி. - எஸ்.டி. மாணவர்கள் தங்கி படிக்கும் மாணவர்கள் விடுதியில் பல வருடங்களாக ராக்கிங் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்