உலர்களமாக மாறிவரும் நெடுஞ்சாலைகள்விபத்துக்கு வழிவகுப்பதாக வாகனஓட்டிகள் குற்றச்சாட்டு

உலர்களமாக மாறிவரும் நெடுஞ்சாலைகளால் விபத்துக்கு வழிவகுப்பதாக வாகனஓட்டிகள் குற்றச்சாட்டி உள்ளனா்.

Update: 2023-03-13 18:45 GMT


கள்ளக்குறிச்சி மாவட்டம், முழுக்க முழுக்க விவசாயத்தையே சார்ந்து உள்ள ஒரு மாவட்டமாகும். ஆனால், விவசாயிகளுக்கான அடிப்படை தேவைகள் அனைத்தும் முழுமை பெற்று அமைந்துவிடவில்லை. அதில் ஒன்று தானியங்களை உலர்த்த பயன்படும் உலர்களங்கள்.

விவசாயிகள் தங்களது நிலத்தில் விளையும் வேளாண் பொருட்களை உலர்த்தும் விதமாக உலர்கள வசதி என்பது பெரும்பலான இடங்களில் இல்லை. இதனால் அவர்கள் நெடுஞ்சாலைகளை நோக்கி வர வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.

அறுவடை காலம்

ஆம், மூங்கில்துறைப்பட்டு, அதை சுற்றியுள்ள பகுதிகளான சவேரியார்பாளையம், புதுப்பட்டு, புத்திராம்பட்டு, ரங்கப்பனூர், ராவத்தநல்லூர், கானாங்காடு, கடுவனூர், பாக்கம், மேல் சிறுவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது.

இங்கு நெல், மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து மற்றும் கரும்பு ஆகிய பயிர்கள்தான் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், மக்காச்சோளம், உளுந்து, மணிலா பயிர்களின் அறுவடை காலம் தற்போது தொடங்கி இருக்கிறது.

நெடுஞ்சாலைகளுக்கு படையெடுக்கும் விவசாயிகள்

அறுவடை செய்த பயிர்களை உலர வைத்து மூட்டை கட்டுவதற்கு ஏதுவாக இவர்களுக்கு போதிய களங்கள் இல்லாமல் இருக்கிறது. இதனால் நெடுஞ்சாலைகளை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள், சாலையின் ஒரு பகுதியில் கொட்டி வைத்து பயிர்களை வெயிலில் உலர்த்தி வருகிறார்கள்.

குறிப்பாக கள்ளக்குறிச்சி சாலை, திருவண்ணாமலை சாலை, புதூர் கூட்டு சாலை, சேராப்பட்டு சாலை உள்ளிட்ட பெரும்பாலான சாலைகள் இன்று உலர்களங்களாக மாறிவிட்டது.வேளாண் பொருட்களை உலர வைக்காமல் மூட்டைகள் கட்டினால் அதுவீணாகி விடும் என்பதால், விவசாயிகள் இத்தகைய பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விபத்துக்கு வழிவகுக்கிறது

ஏற்கனவே பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இருப்பது என்பதோடு, இதுபோன்று உலர வைக்காமல் விற்பனைக்கு மூட்டை கட்டி எடுத்து சென்றால், அவைகள் வீணாகி மேலும் நஷ்டத்தை சந்திக்கவைத்துவிடும் என்பதாலேயே விவசாயிகள் இத்தகைய செயலில் இறங்கி இருக்கிறார்கள்.

அதேநேரத்தில் இவ்வாறு சாலைகள் உலர்களங்களாக மாறிவருவது, அந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் உயிருக்கே ஆபத்தைவிளைவிப்பதாக மாறிவிடுமோ என்ற அச்சமும் ஒரு புறம்எழுந்து வருகிறது.ஏனெனில் இருவழிபாதைகளில், சாலையின் நடுவே கற்களை அடுக்கி வைத்து பயிர்களை விவசாயிகள் காயவைத்து இருப்பது விபத்துக்கு வழிவகுப்பதாக அமைகிறது.

தரமற்ற உலர்களங்கள்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பெரும்பாலான இடங்களில் உலர்களங்கள் இல்லை. சில இடங்களில் அமைக்கப்பட்ட உலர் களங்களும், தரமற்ற முறையில் அமைத்ததால், அவைகள் சேதமைடைந்து பயனற்று கிடக்கின்றன. இதனால் தான் நாங்கள் வேறு வழியின்றி சாலையை தேடி வர வேண்டி உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும், ஆனால் வேறுவழி தெரியவில்லை. எனவே அரசு தேவையான இடங்களில் உலர்களங்கள் அமைத்து தருவதற்கு முன்வர வேண்டும் என்று தொிவித்தனர்.

வாகன ஓட்டிகள் கூறுகையில், பெரும்பாலான சாலைகளில் நெல், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட தானியங்கள் உலர்த்தப்பட்டு வருவதால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் உள்ளது.

மேலும் மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் வழவழப்பு தன்மை கொண்டதால்,இதன் மீது வாகனங்கள் சென்றால் பிரேக் பிடித்தாலும் நிற்பது கிடையாது. இதனால் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு தனியே உலர் களங்கள் அமைத்து கொடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்