டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட கர்ப்பிணி இறந்ததால் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஏரியூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய ஜி.கே.மணி எம்.எல்.ஏ.வுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-29 16:17 GMT

ஏரியூர்:

பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட கர்ப்பிணி இறந்ததால் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஏரியூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய ஜி.கே.மணி எம்.எல்.ஏ.வுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கர்ப்பிணி சாவு

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பட்டக்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சத்யபிரகாஷ். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது21). நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த மாதம் 19-ந் தேதி பிரசவத்திற்காக ஏரியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரமேஸ்வரி உயிரிழந்தார்.

இதனால் இப்பகுதி பொதுமக்கள் டாக்டர்களின் அலட்சிய போக்கால் கர்ப்பிணி இறந்து விட்டதாக கூறி டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் பரமேஸ்வரி உயிரிழந்து 40 நாட்களுக்கு மேல் ஆகியும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அவரது உறவினர்கள், பொதுமக்கள் நேற்று ஏரியூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பின்னர் பொதுமக்கள் மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏரியூர் போலீசார் மற்றும் அந்த வழியாக வந்த ஜி.கே.மணி எம்.எல்.ஏ. ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கர்ப்பிணி இறந்து 40 நாட்களுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி அவர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்