ஊட்டி பஸ் நிலையம் முதல் சேரிங்கிராஸ் வரை ரூ.3¼ கோடியில் சாலை விரிவாக்கம்

ரூ.3¼ கோடியில் ஊட்டி எட்டின்ஸ் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

Update: 2023-08-25 00:30 GMT

ஊட்டி

ரூ.3¼ கோடியில் ஊட்டி எட்டின்ஸ் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

எட்டின்ஸ் சாலை

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு 1,27,540 பேர் வசித்து வருகின்றனர். இதேபோல் வழக்கமான நாட்களில் சுமார் 10,000 பேரும் வார விடுமுறை நாட்களில் சுமார் 15,000 பேரும் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். இதே போல் 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளும், 3436 நிறுவனங்களும் உள்ளன.

ஒரே சமயத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வருவதால் நகரில் சேரிங்கிராஸ், ஏ.டி.சி., புதிய பஸ் நிலையம், மார்க்கெட் உள்பட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக சீசன் காலங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு நகருக்குள் வாகனங்கள் வர தடை விதிக்கப்படுகிறது. இதனால் ஆர்வமாக சுற்றுலா வரும் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாமல் மீண்டும் தங்கும் விடுதிக்கு திரும்புகின்றனர்.

ரூ.3¼ கோடியில் பணிகள் தொடக்கம்

எனவே ஊட்டி நகரில் வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கவும், சாலைகளை அகலப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து ஏடிசி வழியாக சேரிங்கிராஸ் வரை செல்லும் எட்டின்ஸ் சாலை அகலப்படுத்தும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- ஊட்டி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பஸ் நிலையத்தில் இருந்து சேரிங்கிராஸ் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சாலையை அகலப்படுத்த திட்டமிடப்பட்டு டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. டெண்டர் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே முடிந்து இருந்தாலும், கோடை சீசன் காரணமாக பணிகள் தற்போது தான் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதத்தில் இந்த பணிகள் முடிந்து விடும்.

இந்த திட்டப்படி சாலையின் இருபுறமும் அகலப்படுத்தப்பட்டு பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை மற்றும் சில்வர் கைப்பிடி அமைக்கப்படும். இதனால் சுற்றுலா பயணிகள் எளிதாக நடந்து செல்லலாம். போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம் குறையும்.

இதற்கிடையே சாலை அகலப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக ஏ.டி.சி பகுதியில் இருந்து பஸ் நிலையம் செல்லும் கால்வாய் தூர்வாரப்பட்டு, நடைபாதை அமைக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்