திருக்கோவிலூர்-திருவண்ணாமலை இடையே ரூ.70 கோடியில் சாலை விரிவாக்கப்பணி நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு
ரூ.70 கோடியில் திருக்கோவிலூர்-திருவண்ணாமலை இடையே நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப்பணியை நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் பிரதாப் யாதவ் நேரில் ஆய்வு செய்தார்.
திருக்கோவிலூர்,
ஆய்வு
திருக்கோவிலூர்- திருவண்ணாமலை இடையே இருவழிச்சாலை முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி ரூ.70 கோடி செலவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருக்கோவிலூர் தபோவனம் முதல் காட்டுகோவில் வரை நடைபெற்று வரும் இந்த பணியை தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை முதன்மை செயலாளர் பிரதாப் யாதவ் நேரில் பார்வையிட்டு பணியின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் சாலையின் குறுக்கே சிறுபாலம் கட்டும் பணிகள் மற்றும் பாலம் கட்டும் இடத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் மாற்றுப் பாதை ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டதோடு, சாலையோரம் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்.
பராமரிக்க வேண்டும்
அதைத்தொடர்ந்து முதன்மை செயலாளர் பிரதாப்யாதவ் சாலையோரம் நடப்படும் மரக்கன்றுகள் அனைத்தும் நன்கு வளரும் வகையில் அதனை பராமரிப்பதோடு, தினமும் கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட பொறியாளர் கே.எஸ்.ராஜ்குமார், தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் ஞானவேல், திருக்கோவிலூர் உதவி கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு, கள்ளக்குறிச்சி தர கட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் பாலசுப்ரமணியன் மற்றும் உதவி பொறியாளர்கள் புகழேந்தி, பிரவீன் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.