மோகனூர் அருகே எல்லை பிரச்சினையை தீர்க்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் தாசில்தார் பேச்சுவார்த்தை
மோகனூர் அருகே எல்லை பிரச்சினையை தீர்க்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.;
மோகனூர்:
மோகனூர் அருகே எல்லை பிரச்சினையை தீர்க்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அடிப்படை வசதிகள்
மோகனூர் ஒன்றியத்துக்குட்பட்ட மணியங்காளிப்பட்டி கிராமமானது மோகனூர் பேரூராட்சி பகுதியையொட்டி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா இடத்தில் குடிசை மற்றும் வீடு கட்டி வசித்து வந்தனர். அதில் ஒரு பகுதி மணியங்காளிப்பட்டி புதுக்காலனியாக மாறியது. ஆனால் அங்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என கூறப்படுகிறது. மணியங்காளிப்பட்டி புதுக்காலனி பகுதியானது டவுன் பஞ்சாயத்து முதல் வார்டுக்குட்பட்டது என்று கூறப்பட்டு வருகிறது.
ஆனால் உள்ளாட்சி தேர்தலில் மணியங்காளிப்பட்டி புதுக்காலனி மக்கள் பேட்டப்பாளையம் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஓட்டு போட்டு உள்ளனர். இதனால் மணியங்காளிப்பட்டி புதுக்காலனி ஊராட்சிக்குட்பட்டதா? பேரூராட்சிக்குட்பட்டதா? என்ற எல்லை பிரச்னை 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வீட்டு வரி உள்ளிட்ட எந்த வரியும் செலுத்த முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
போக்குவரத்து பாதிப்பு
இந்த நிலையில் மணியங்காளிப்பட்டி புதுக்காலனியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மோகனூரில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் சாலையில் திரண்டனர். பின்னர் எல்லை பிரச்சிகைக்கு தீர்வு காணகோரி அங்குள்ள வள்ளியம்மன் கோவில் அருகில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்து அங்கு வந்த தாசில்தார் தங்கராஜ் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் ஒரு வாரத்தில் நில அளவையர் மூலம் எல்லை பிரிக்கப்பட்டு குடியிருப்புகள் டவுன் பஞ்சாயத்தில் உள்ளதா? கிராம ஊராட்சியில் உள்ளதா? என கணக்கிட்டு அந்த நிர்வாகத்திடம் அடிப்படை வசதிகளை பெற்று கொள்ளலாம் என கூறினர். இதில் சமாதானம் அடைந்த கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால், மோகனூர்- பரமத்திவேலூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.