சாலை ஆக்கிரமிப்பால் நெற்பயிருக்குள் பிணத்தை தூக்கி செல்லும் அவலம்

சாலை ஆக்கிரமிப்பால் நெற்பயிருக்குள் பிணத்தை தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2022-08-20 15:49 GMT

அணைக்கட்டு அருகே கிராம மக்களுக்கதக வருவாய்த்துறையினர் அமைத்த பாதையை தனிநபர் ஆக்கிரமித்து பயிர் செய்து வரும் இடத்துக்கு அலுவலர்கள் முறைகேடாக பட்டா வழங்கி உள்ளதை தாசில்தார் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்தார். பாதை ஆக்கிரமிப்பால் இறந்தவர் உடலையும் கிராம மக்கள் கொண்டு செல்ல சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வருவாய்த்துறையினர் அமைத்த பாதை

அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட கெங்கநல்லூர் ஊராட்சியில் தோரணகுளம், மலைச்சந்து, கூண கொல்லை மலையாளம் ஆகிய நான்கு கிராமங்களில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிக வருவாய்த்துறையினர் சாலை வசதி ஏற்படுத்தி உள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் சுமார் 250 மீட்டர் தூரத்திற்கு ஆக்கிரமிப்பு செய்து நெல் பயிரிட்டும் மற்றும் தென்னைகளை வளர்த்தும் ஆக்கிரமித்து வந்துள்ளார். பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் கலெக்டர், கோட்டாட்சியர், அணைக்கட்டு தாசில்தார் உள்பட பல்வேறு துைறயினருக்கு மனு அளித்துள்ளனர். ஆனால் ஆக்கிரமிப்பை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை்.

இந்த நிலையில் மலைச்சந்து கிராமத்தில் வசித்து வந்த முதியவர் ஒருவர் இறந்து விட்டார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக இடுகாட்டிற்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம்உடலை தூக்கிக்கொண்டு வந்தனர். ஆக்கரமிப்பு செய்து நெல் பயிரிடப்பட்டிருக்கும் நிலத்துக்குள்ளேயே அவர்கள் உடலை தூக்கி சென்றனர்.

இதுகுறித்து அந்தப் பகுதியில் வசித்து வருபவர்கள் கூறுகையில், ''ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்திற்கு அருகே 40 மீட்டர் அகலம் கொண்ட மலைக்கானார் உள்ளது. அந்த கானாறும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதோடு கிராம மக்கள் பயன்படுத்தி வந்த பாதையையும் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து நெல் நடவு செய்து வருகின்றார். பலமுறை அரசு அதிகாரிகளிடம் இது குறித்து கோரிக்கை மனுகொடுத்தும் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையிலும் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல பாதை வசதி இல்லாததால் நாங்கள் நெற்பயிரில் நடந்து வரும் அவலம் தொடர்ந்து நடந்து வருகின்றது. ஆகவே அரசு அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை பார்வையிட்டு எங்களுக்கு பாதை வசதியை ஒதுக்கி தர வேண்டும்'' என்றார்.

தாசில்தார் ஆய்வு

ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை சனிக்கிழமை மாலை அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது அந்த இடம் மேய்க்கால் புறம்போக்கு எனவும் 1986 -ம் ஆண்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அவரது செல்வாக்கை பயன்படுத்தி பட்டா வாங்கி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த பகுதி மக்கள் அரசு அதிகாரிகள் தவறாக கொடுத்த அந்த பட்டாவை ரத்து செய்துவிட்டு மறுவரையரை செய்து எங்களுக்கு பாதை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்