தொண்டி அருகே மண்அரிப்பால் சேதமடைந்த சாலை
தொண்டி அருகே மண் அரிப்பால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தொண்டி
ஒருவழி சாலை
தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை, காரங்காடு ஊராட்சிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடற்கரை கிராமங்கள் என்பதால் இங்குள்ள மக்கள் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அ.மணக்குடி கிராமத்திலிருந்து மிகவும் குறுகிய அளவிலான ஒரு வழிச்சாலை செல்கிறது.
தினமும் இந்த 2 ஊராட்சிகளிலும் பிடிக்கப்படும் மீன், நண்டு போன்றவற்றை இங்குள்ள மீனவர்கள் விற்பனைக்காக தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வாகனங்களில் ஏற்றி செல்வது வழக்கம். மேலும் ஏற்றுமதி கம்பெனிகளை சேர்ந்த வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், அரசு பஸ்கள் என தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகிறது.
மண் அரிப்பு
சாலையின் இரு புறங்களிலும் ஆற்று நீரோடை உள்ளது. சாலை மிகவும் குறுகியது என்பதால் ஒரு பஸ் அல்லது நான்கு சக்கர வாகனம் சென்றால் எதிரே வரும் வாகனம் செல்வதில் மிகுந்த சிரமம் உள்ளது. இந்நிலையில் சாலையின் இரு புறங்களிலும் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் உள்ளனர்.
தற்போது மழைக்காலம் என்பதால் மழை நீர் சாலையின் இரு புறங்களிலும் ஓடி மண்ணரிப்பு அதிக அளவில் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் இந்த 2 ஊராட்சிகளுக்கும் சென்று வரும் அரசு பஸ்கள் ஊருக்குள் வந்து செல்வதை நிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
பொதுமக்கள் கோரிக்கை
எனவே, சாலையின் இரு புறங்களிலும் ஏற்பட்டுள்ள மண்ணரிப்பை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோரத்தில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
மேலும் சாலையை அகலப்படுத்தி இருவழி சாலையாக ஏற்படுத்தி தர வேண்டும். என காரங்காடு, முள்ளிமுனை ஊராட்சி தலைவர்கள் அமிர்தவல்லி மேகமலை, கார்மேல் மேரி செங்கோல் மற்றும் கிராம தலைவர்கள், நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.