பல்லாங்குழி சாலைகளால் பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்

திண்டுக்கல்லில் பல்லாங்குழி சாலைகளால் வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர்.

Update: 2022-10-30 16:05 GMT

ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு விஷயத்துக்காக பயணம் செய்கின்றனர். இந்த பயணத்துக்கு பஸ், கார், மோட்டார் சைக்கிள், சைக்கிள் என பலரும் பலவிதமான வாகனங்களை பயன்படுத்துகின்றனர். எந்த வாகனத்தை பயன்படுத்தினாலும், அது செல்வது சாலையில் தான்.

குறுகலான சாலைகள்

பொதுமக்கள் விரும்பிய வாகனங்களில் சிரமம் இல்லாமல் செல்வதற்கு தரமான சாலை வசதி தேவை. இதனால் மக்களுக்கான அடிப்படை வசதிகளில் சாலையும் ஒன்றாகும். இதை கருத்தில் கொண்டே தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள் அமைக்கப்படுகின்றன. வாகனங்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப சாலைகளின் தரம் உயர்கிறது.

அதன்படி திண்டுக்கல் நகரில் நெடுஞ்சாலை, மாநகராட்சி சாலைகள் அமைந்து உள்ளன. நகரில் ஒருசில சாலைகளை தவிர பெரும்பாலான சாலைகள் குறுகலானவை ஆகும். அதேநேரம் பஸ், கார், மோட்டார் சைக்கிள்கள் தினமும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் நகரில் வலம் வருகின்றன. இதனால் ஒருசில சாலைகளுக்கு, போக்குவரத்து நெரிசலே அடையாளம் என்றாகிவிட்டது.

ராட்சத பள்ளங்கள்

நெரிசலை சமாளிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சேதம் அடைந்த சாலைகள் மற்றொரு சவாலாக இருக்கிறது. திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதில் கனமழை பெய்யும் நேரத்தில் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி, சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடுவதை பார்க்க முடிகிறது.

மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்து விடுகின்றன. அதிலும் ஒருசில இடங்களில் முக்கிய சாலைகளில் ராட்சத பள்ளம் உருவாகி இருக்கிறது. அந்த வகையில் திண்டுக்கல் சத்திரம் சாலை, பூ மார்க்கெட், காமராஜர் சிலை, ஜி.டி.என். சாலை, திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தெற்கு வாசல் முன்பு என பல இடங்களில் சாலைகளில் பெரிய பள்ளங்கள் காணப்படுகின்றன.

விபத்தில் சிக்கும் வாகனங்கள்

குறிப்பாக திண்டுக்கல் பூ மார்க்கெட், அரசு மருத்துவமனையின் தெற்கு வாசல் ஆகிய பகுதியில் அபாய வளைவுகள் இருக்கின்றன. அந்த இடங்களில் ஒரு அடி ஆழத்தில் பள்ளம் இருப்பதால் வாகனங்கள் இயல்பாக திரும்பி செல்ல முடியவில்லை. இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.

மேலும் சத்திரம் சாலை, காமராஜர் சிலை பகுதியில் நடுசாலையில் பெரிய, பெரிய பள்ளங்கள் காணப்படுகின்றன. இந்த சாலைகளின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் உள்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால் பஸ்களை பின்தொடர்ந்து செல்லும் இருசக்கர வாகனங்கள் எதிர்பாராத வகையில் பள்ளத்தில் இறங்கி விபத்தை சந்திக்கின்றன. பல்லாங்குழி சாலைகளால் வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர்.

உடனடி சீரமைப்பு

இதேபோல் முக்கிய சாலைகளில் உருவான ராட்சத பள்ளங்களில் வாகனங்கள் இறங்கி செல்லும்போது அதன் உதிரிபாகம் பழுதாகிறது. அதுமட்டுமின்றி வாகனங்களில் செல்வோருக்கு இடுப்பு வலி, மூட்டுவலி, உடல்வலி உள்ளிட்ட தொந்தரவுகளும் ஏற்படுகின்றன.

தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க, விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதேநேரம் விதிமீறல் மட்டுமின்றி, சேதம் அடைந்த சாலைகளாலும் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே திண்டுக்கல் நகரில் சேதம் அடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்