முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடிபழனிசாமி கைதை கண்டித்து அ.தி.மு.க.வினர் 5 இடங்களில் சாலை மறியல் 437 பேர் கைது

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடிபழனிசாமி கைதை கண்டித்து அ.தி.மு.க.வினர் 5 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களில் 437 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

Update: 2022-10-19 18:45 GMT


சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று தடை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து, நேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

அதன்படி, கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் முன்னாள் அமைச்சர் மோகன் தலைமையில் நகர செயலாளர் பாபு, தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைய தலைவரும், வடக்கு ஒன்றிய செயலாளருமான ராஜசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல்பாபு, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் பச்சையாபிள்ளை, முன்னாள் எம்.பி.காமராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் கூட்டுறவு வங்கி தலைவர் ரங்கன் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் எடப்பாடி பழனிசாமியை கைது செய்ததை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் மோகன் உள்பட 82 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்து மாலை விடுவித்தனர்.

உளுந்தூர்பேட்டை

இதேபோல் உளுந்தூர்பேட்டையில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு தலைமையில் 300 - க்கும் மேற்பட்டோர் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான போலீசார், 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதில், ஒன்றிய செயலாளர்கள் செண்பகவேல், மணிராஜ், ஏகாம்பரம், சந்திரன், மாவட்ட துணை செயலாளர் பரமாத்மா, ஒன்றிய நிர்வாகிகள் சாய்ராமன், நமச்சிவாயம், நகர செயலாளர் துரை, களமருதூர் ஆனந்தன், கள்ளமேடு மனோகரன், மடப்பட்டு எழிலரசன், நகர நிர்வாகிகள் கோபால், சாய், அருண், வெங்கடேசன், வக்கீல் திலீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சின்னசேலம்

சின்னசேலம் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யம்பெருமாள், சின்னசேலம் நகர செயலாளரும், பேரூராட்சி துணை தலைவருமான ராகேஷ் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை சின்னசேலம் போலீசார் கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் தெற்கு மற்றும் மத்திய ஒன்றியம் சார்பில் பகண்டை கூட்டுரோட்டில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தெற்கு ஒன்றிய செயலாளர் அருணகிரி தலைமை தாங்கினார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமையில் மணலூர்பேட்டையில் 70-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மணலூர்பேட்டை போலீசார் 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

சங்கராபுரம்

சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் அ.தி.மு.க நகர செயலாளர் நாராயணன் தலைமையில் விவசாய அணி மாவட்ட செயலாளர் சன்னியாசி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜேந்திரன், கல்வராயன்மலை ஒன்றிய செயலாளர் ரவி, நகர அவைதலைவர் ஜியாவுதீன் மற்றும் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோன்று சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் அ.தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், அவை தலைவர் அண்ணாமலை ஒன்றிய துணை செயலாளர் லதா, மாவட்ட பிரதிநிதி முத்தையன், கண்ணன் மற்றும் நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் 25 பேரை சங்கராபுரம் போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் 5 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மொத்தம் 437 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்