வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்
கரூர் அருகே வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
ஆயக்கட்டு வாய்க்கால்
கரூர் அருகே உள்ள செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றின் குறுக்கே அணைகட்டு கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து பாசனத்திற்காக வாய்க்கால்கள் பிரிந்து செல்கிறது. இதில் பஞ்சமாதேவி ஆயக்கட்டு வாய்க்கால் ஒன்று பிரிந்து சோமூர் வரை செல்கிறது. இதனால் சுமார் 800 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.இந்தநிலையில் பஞ்சமாதேவி ஆயக்கட்டு வாய்க்காலில் பல்வேறு இடங்களில் ஆகாயத்தாமரைகள் முளைத்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. மேலும் அந்த வாய்க்காலில் கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் வாய்க்கால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோரிக்கை
தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வாய்க்காலில் முளைத்துள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் கழிவுநீரை சுத்தம் செய்து தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.