விதிகளை மீறும் பஸ் டிரைவர்களால் விபத்து அபாயம்

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் விதிகளை மீறும் பஸ் டிரைவர்களால் விபத்து அபாயம்

Update: 2023-05-28 18:45 GMT

விழுப்புரம்

சென்னைக்கு அடுத்து போக்குவரத்தில் தமிழகத்தின் முக்கியமான நகரமாக விளங்குவதில் விழுப்புரமும் ஒன்று. இங்கிருந்து எந்நேரமும் வெளியூர்களுக்கு செல்ல பஸ் வசதி உள்ளது. சென்னை, திருச்சி, கும்பகோணம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விழுப்புரம் வந்து மாற்றுப்பாதைக்கு பிற வாகனங்களில் செல்வோர் ஏராளம். இதனால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் எந்நேரமும் பயணிகள் கூட்டம் மிகுந்து காணப்படும். இந்த பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே வரவும், பஸ் நிலையத்தில் இருந்து வெளியே செல்லவும் தனித்தனி வழிப்பாதைகள் உள்ளன. அந்த வழிப்பாதை முறைகளை பின்பற்றியே அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பஸ் டிரைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஆனால் இந்த உத்தரவை பஸ் டிரைவர்கள் சிலர் முறையாக பின்பற்றுவதில்லை. அதை போக்குவரத்துத்துறை அதிகாரிகளும் அவ்வப்போது கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.

இதன் விளைவு, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியே வரும் வழியில் எதிர்திசையில் சில பஸ்கள் அதிவேகமாக பஸ் நிலையத்தினுள் வருகின்றன. குறிப்பாக புதுச்சேரி மார்க்கம் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களை அதன் டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் இப்படிப்பட்ட பொறுப்பற்ற முறையில் இயக்கி வருகின்றனர். சில பஸ்கள் அதிவேகமாக எதிர்திசையில் வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பஸ் நிலையத்தின் உள்ளே இருந்து வெளியே வரும் பயணிகள் மிகவும் அச்சமடைகின்றனர். எனவே விதிகளை மீறும் பஸ் டிரைவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

Tags:    

மேலும் செய்திகள்