மண்எண்ணெய் கேனுடன் நகராட்சியை முற்றுகையிட்டதால் பரபரப்பு
வந்தவாசி நகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணி வழங்கக் கோரி, மண் எண்ணெய் கேனுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசி
வந்தவாசி நகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணி வழங்கக் கோரி, மண் எண்ணெய் கேனுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மண்எண்ணெய் கேனுடன் முற்றுகை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணியில் சுமார் 30 பெண்கள் தினக்கூலி அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக வேலை செய்து வந்தனர்.
டெங்கு ஒழிப்பு பணி இல்லாத மாதங்களில் இவர்கள் நகரின் தூய்மைப் பணிகளையும் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக இவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் டெங்கு ஒழிப்பு பணிக்காக மீண்டும் 12 தினக்கூலி பணியாளர்களை நியமிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இதனையறிந்த ஏற்கனவே பணியாற்றிய தினக்கூலி டெங்கு ஒழிப்பு பெண் பணியாளர்கள் மண்எண்ணெய் கேனுடன் வந்தவாசி நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
தங்கள் அனைவருக்கும் பணி வழங்காவிட்டால் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று அவர்கள் கூறினர். அப்போது அங்கிருந்த வந்தவாசி தெற்கு போலீஸ் நிலைய போலீசார் அவர்களிடமிருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து நகராட்சித் தலைவர் எச்.ஜலால், ஆணையர் எம்.மங்கையர்க்கரசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.