தமிழ்நாட்டில் சேவை பெறும் உரிமை சட்டம் அவசியம் - ராமதாஸ் வலியுறுத்தல்

அரசின் சேவைகள் மக்களுக்கு தாமதம் இன்றி கிடைக்க தமிழ்நாட்டில் சேவை பெறும் உரிமை சட்டம் அவசியம் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-02-03 08:46 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் சான்றிதழ்களைப் பெறவும், நலத்திட்ட உதவிகளைப் பெறவும் பொதுமக்களை அலையவிடக்கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார். மக்களுக்கு அரசின் சேவைகள் தாமதமின்றி கிடைக்க வேண்டும் என்ற முதல்-அமைச்சரின் அக்கறை பாராட்டத்தக்கது. இந்தச் சிக்கலுக்கு மிகவும் எளிதான தீர்வு கைவசம் இருக்கும் நிலையில், அதை செயல்படுத்துவதற்கு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்காதது தான் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் பொதுச்சேவை சட்டம் இயற்றப்பட்டால், சாதிச்சான்றிதழ், பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். குறித்த காலத்தில் சேவை கிடைக்காத மக்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கவும் வகை செய்யப்படும். அதனால், அதிகாரிகள் குறித்த நேரத்தில் சேவை வழங்குவார்கள்.

அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. அதற்காக பொதுச்சேவை பெறும் உரிமை சட்ட முன்வரைவை மார்ச் மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசு தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.    

Tags:    

மேலும் செய்திகள்