மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை திரும்ப பெற வேண்டும்
மின்வாரியத்தின் கட்டண உயர்வு திட்டம் குறித்த ஒழுங்குமுறை ஆணையத்தின் மதுரையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அனைத்து தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டது.
மின்வாரியத்தின் கட்டண உயர்வு திட்டம் குறித்த ஒழுங்குமுறை ஆணையத்தின் மதுரையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அனைத்து தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டது.
கருத்து கேட்பு கூட்டம்
தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கட்டணங்களை பலமடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனை தொடர்ந்து, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் பொதுமக்களுக்கான கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி வருகிறது. அதன்படி, மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள தென்மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் ஆணையத்தின் தலைவர் எம்.சந்திரசேகர், உறுப்பினர் கே.வெங்கடேசன் மற்றும் செயலாளர் வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.
பல்வேறு சங்கத்தினர் பங்கேற்பு
இந்த கூட்டத்தில், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மடீசியா, புதூர் சிட்கோ தொழிற்பேட்டை சங்கம், மதுரை பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு செங்கல் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கம், ரப்பர் தொழிற்சங்கம், துணி உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, சிவகாசி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மதுரை மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அப்போது, கொரோனா நோய்த்தொற்றில் இருந்து சிறு, குறுந்தொழில் துறையினர் மீண்டு வரும் சூழலில், மின் கட்டணம், நிலைக்கட்டணம், அதிக பயன்பாடுள்ள கால மின் கட்டணம் ஆகியவற்றை திணிப்பது ஏற்புடையதில்லை.
கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்
மின்வாரியத்தின் நஷ்டத்தை தவிர்க்க, முறையான திட்டங்கள், தேவையற்ற செலவினங்கள் குறைப்பு, ஊழல் ஆகியவற்றை முறைப்படுத்தினால் போதுமானது. இதுவரை மின்சாரத்துக்கு கட்டணம் செலுத்தாமல் ஒரு நபர் கூட பயன்படுத்தியதில்லை. மின் கட்டணம் 50 சதவீதம் உயர்வு, பிற கட்டணங்கள் குறைந்தபட்சம் ரூ.35 ஆக இருந்ததை ரூ.600, ரூ.4000 கட்டணத்தை ரூ.67 ஆயிரமாக உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. சீனாவை விட தமிழகத்தில் தற்போதைய மின் கட்டணம் அதிகமாக உள்ளது. மராட்டியத்தில் தனியார் மின் வினியோகம் உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்கு பதிலாக, கட்டண கொள்ளை அடிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தை தொழில்துறையே இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டுமெனில் இந்த கட்டண உயர்வை அமல்படுத்தலாம். மின்வாரியத்தின் வரவு, செலவு அறிக்கையில் குளறுபடிகள் உள்ளன. அரசு 1.09 சதவீதம் மட்டுமே மானியம் தருகிறது. நிலக்கரி வாங்குவதில் ஊழல், காற்றாலை மின்சாரம் வாங்குவதில் ஊழல் என இருந்து விட்டு, பொதுமக்களிடம் கட்டண கொள்ளையடிக்க விரும்புவது நியாயமில்லை. எனவே, இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மதுரையில் மின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்ற அரங்கம் முன்பாக கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. அவர்கள் மின்கட்டண உயர்வை திரும்ப பெற்று கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.