பூட்டிக்கிடக்கும் நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

உடுமலை அருகே குறிச்சிக்கோட்டை கிராமத்தில் நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம் பூட்டப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

Update: 2023-02-24 17:08 GMT

உடுமலை அருகே குறிச்சிக்கோட்டை கிராமத்தில் நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம் பூட்டப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

உடுமலை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் குறிச்சிகோட்டை வருவாய் உள்வட்டம் உள்ளது. குறிச்சிகோட்டை கிராமத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இதன் கட்டுப்பாட்டில் குறிச்சிக்கோட்டை, மானுப்பட்டி, ஜல்லிபட்டி, தளி, திருமூர்த்திநகர், குருவப்ப நாயக்கனூர், தும்பலப்பட்டி, அமராவதி, ஆண்டியகவுண்டனூர் 2, பள்ளபாளையம், ஆலாம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் அடங்கி உள்ளது. அரசு அளிக்கின்ற பல்வேறு சேவைகளை பொதுமக்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை அணுகி பெற்று வரும் சூழலே நடைமுறையில் உள்ளது.

ஆனால் கடந்த சில நாட்களாக குறிச்சிக்கோட்டையில் உள்ள அலுவலகத்திற்கு நில வருவாய் ஆய்வாளர் சரியாக வருகை தருவதில்லை. இதனால் பொதுமக்கள் தங்கள் தேவைகள் மற்றும் சேவைகளை பூர்த்தி செய்வதில் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

பொதுமக்கள் அவதி

பிறப்பு, இறப்பு, வாரிசு உள்ளிட்ட சான்றுகள் முதல் எந்த ஒரு தேவை என்றாலும் நிலவருவாய் ஆய்வாளர் அலுவலத்திற்கு சென்று பெற வேண்டிய சூழல் உள்ளது. இந்த சூழலில் அலுவலகத்திற்கு வருகை தந்து பணிகளை பூர்த்தி செய்து தருவதில் நிலவருவாய் ஆய்வாளர் அலட்சியம் காட்டி வருகிறார். இதனால் பொதுமக்கள் தக்க தருணத்தில் தேவைகள் மற்றும் சேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்படும் சூழல் உள்ளது. நாள்தோறும் வருவாய் ஆய்வாளர் வருகைக்காக காத்திருந்து கூலித் தொழிலாளர்கள் வருமான இழப்பையும் சந்தித்து வருகின்றனர்.

அவர் சொந்த பணிக்காகவோ அல்லது அலுவலகப் பணிக்காகவோ சென்றால் ஒரு அறிவிப்பு பதாகையாவது வைத்து விட்டு செல்லலாம். அல்லது உதவியாளர் அலுவலகத்தில் இருக்கலாம்.

இது போன்ற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக முன்னறிவிப்பு இல்லாமல் அலுவலகத்தை பூட்டி வைத்து விட்டு சென்று விடுகிறார்கள். அத்துடன் அலுவலகத்தை சுற்றிலும் பராமரிப்பு மேற்கொள்ளாததால் புதர்மண்டி விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது.

நடவடிக்கை

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிச்சிக்கோட்டை உள்வட்ட நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம் பூட்டப்பட்டது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அலுவலக வளாகத்தை தூய்மைப்படுத்துவதற்கும் முன்வர வேண்டும். என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்