பணியில் இருந்து ஓய்வு: தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி விடைபெற்றார்

தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். காவல் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், மக்கள் பணியை தொடர்ந்து செய்வேன் என்று அவர் உற்சாகமாக பேசினார்.

Update: 2022-06-01 10:20 GMT

சென்னை தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தின் முதல் போலீஸ் கமிஷனர் என்ற பெருமை பெற்ற டி.ஜி.பி.ரவி, நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு சிறப்பான வழி அனுப்பு விழா, நேற்று மாலை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. கமிஷனர் ரவி மாலை 5 மணி அளவில் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திற்கு வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழாவின் தொடக்கத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் வரவேற்று பேசினார். டி.ஜி.பி.சைலேந்திரபாபு விழாவுக்கு தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-

நானும், ரவியும் மதுரை வேளாண்மை கல்லூரியில் ஒரு ஆண்டு ஒன்றாக படித்தோம். அதன்பிறகு நான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணி செய்தேன். ரவி சிண்டிகேட் வங்கியில் வேலை செய்தார். டெல்லியில் அவருடைய வீட்டில்தான் நான் தங்கி இருந்து படித்து ஐ.பி.எஸ்.தேர்ச்சி பெற்றேன். அவருடைய அந்த வீட்டில் தங்க இடம் கொடுத்து உணவும் கொடுத்தார். அவர் நிறைய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகளை இது போல அவருடைய வீட்டில் தங்க வைத்து உருவாக்கியவர். அவர் நல்ல குணம் படைத்தவர்.

அவரது விடா முயற்சி அவரை வெற்றி பெற வைத்தது. 2 முறை ஐ.பி.எஸ். தேர்வில் அவர் தேர்வாக முடியவில்லை. இருந்தாலும், அவரது விடா முயற்சியால், 3-வது முறை ஐ.பி.எஸ்.சில் தேர்ச்சி பெற்று, தமிழகத்திலேயே பணியில் சேர்ந்து விட்டார். 1991-ல் அவர் பணியில் சேர்ந்தபோது எப்படி இருந்தோரோ, அதே போல இப்போதும், நல்ல ஆரோக்கியமாக உள்ளார். அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், காவல் துறையினருக்கு, தொடர்ந்து நல்ல ஆலோசனைகள் வழங்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கமிஷனர் ரவி மிகவும் உற்சாகமாக பேசினார். அவர் கூறியதாவது:-

நான் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் எனது பணியை தொடங்கி, தற்போது தாம்பரத்தில் எனது பணியினை நிறைவு செய்கிறேன். காவல் துறையில் இருந்து நான் ஓய்வு பெற்றாலும், நான் மக்கள் பணியில் இருந்து ஓய்வுபெற வில்லை. தினமும் இரவு 12.30 மணி வரை எப்போதும் போல, எனது பணி தொடரும். 32 ஆண்டுகள் நான் காவல்துறையில் பணி செய்துவிட்டேன்.

மனதும், உடலும் நலமாக இருக்க வேண்டும். அப்போது தான் நாம் சிறப்பாக மக்களுக்கு சேவை செய்ய முடியும். அதுதான் அரசுக்கும், காவல்துறைக்கும், நல்ல பெயரை பெற்றுத்தரும். மக்கள்தான் நமது எஜமானர்கள். காவல்துறையினர் அதிகாரிகள் என்று நினைத்து செயல்படக்கூடாது. மக்களுக்கு சேவை செய்யும் அலுவலர்கள், என்றுதான் செயல்பட வேண்டும். இன்று பகல் 1 மணிவரை கூட நான் பணி செய்து விட்டுதான் வந்துள்ளேன். நில அபகரிப்பில் ஈடுபட்ட ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டு, அதற்கான கோப்பில் 200 கையெழுத்துவரை போட்டு விட்டு வந்துள்ளேன். தாம்பரம் கமிஷனராக நான் பணியாற்றி, 97 குற்றவாளிளை குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ள உத்தரவிட்டுள்ளேன். காக்கி சட்டையை கழற்றுவதுதான் எனக்கு சிறிது வருத்தமாக உள்ளது. இருந்தாலும், இனி நான் சுதந்திர மனிதன் என்ற சந்தோஷத்தோடு, விடைபெறுகிறேன். எனது மக்கள் பணி தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழா முடிவில், நிர்வாகப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.சங்கர் நன்றி தெரிவித்தார். விழாவில் கமிஷனர் ரவிக்கு, நினைவு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் கமிஷனர் ரவியின் மனைவி தெய்வம் ரவி, ரவியின் 83 வயது தாயார் ஞானக்கண்ணு அம்மையார் மற்றும் அவரது 2 மகள்கள் குடும்பத்தினரும் பங்கேற்றனர். உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்