ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் பழைய மாணவர் எனக்கூறி நூதன பணமோசடி
ராமநாதபுரத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம், தங்களது பழைய மாணவர் எனக்கூறி ரூ.22 ஆயிரத்தை நூதன மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம், தங்களது பழைய மாணவர் எனக்கூறி ரூ.22 ஆயிரத்தை நூதன மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியர்
ராமநாதபுரம் மூலக்கொத்தளம் பகுதியை சேர்ந்தவர் ஆனிமுத்து என்பவரின் மகன் காமாட்சி (வயது 71). ராமநாதபுரம் பள்ளி ஒன்றில் 30 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி கடந்த 2013-ல் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை காமாட்சி வீட்டில் தனியாக இருந்தார். அவரது மனைவி ஆதிலட்சுமி மகளைப் பார்ப்பதற்காக மதுரைக்கு சென்று விட்டார்.
அப்போது காமாட்சி தனியாக இருப்பதை நோட்டமிட்ட 60 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் வந்து காமாட்சியிடம் என்னை தெரிகிறதா? நான் உங்களது பழைய மாணவர் என்று கூறி அறிமுகம் ஆகியுள்ளார். தனது மாணவர் இத்தனை ஆண்டுகள் கழித்து தன்னை வந்து சந்திப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்த காமாட்சி அன்பாக பேசியுள்ளார்.
அப்போது மர்ம நபர் தனக்கு தாகம் எடுப்பதாக கூறவே வீட்டிற்கு வந்த மாணவருக்கு குளிர்பானம் வாங்கி கொடுக்கலாம் என்று கருதிய காமாட்சி அருகில் உள்ள கடைக்கு சென்றார். அவர் திரும்பி வந்த போது வீட்டில் இருந்து அவசரமாக வெளியே வந்த மர்ம நபரை பார்த்த காமாட்சி குளிர்பானம் குடியுங்கள் என்று கூறினார். அப்போது அவர் மற்றொரு பழைய மாணவ நண்பர் வந்து கொண்டிருக்கிறார் அவரையும் அழைத்து வருகிறேன் என்று கூறி வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார்.
பணம் திருட்டு
அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த காமாட்சி வீட்டுக்குள் சென்று பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.22 ஆயிரத்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனது மாணவர் என்று கூறி வீட்டிற்குள் வந்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காமாட்சி ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது அந்த நபர் தொருவளூரை சேர்ந்த தற்போது பெரிய பட்டணத்தில் வசித்து வரும் முத்தலிபு மகன் சீனி நூர்தீன் (62) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.