ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில்15 பவுன் நகை-ரூ.50 ஆயிரம் கொள்ளை

பெரம்பலூரில் பட்டப்பகலில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை துணிகரமாக கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-10-07 17:31 GMT

வயலுக்கு சென்று வந்தபோது...

பெரம்பலூர் சூப்பர் நகர் தெற்கு அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 65). ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், தினேஷ்குமார் என்ற மகனும், பிரியதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். மகன், மகளுக்கு திருமணமாகி விட்டது. தினேஷ்குமார் சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வருவதோடு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனால் செல்வராஜூம், தனலட்சுமியும் பெரம்பலூரில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று காலை 9.30 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு செல்வராஜ் பூர்வீக ஊரான அம்மாபாளையத்தில் உள்ள வயலுக்கு தனலட்சுமியுடன் சென்றுவிட்டு மாலை 4.30 மணியளவில் மீண்டும் வீ்ட்டிற்கு வந்தார்.

நகை-பணம் கொள்ளை

அப்போது அவர்கள் வீட்டின் கதவு திறந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 15 பவுன் நகையும், பெட்டியில் வைத்திருந்த ரூ.50 ஆயிரமும் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கள்ள சாவி மூலம் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பீரோவை திறந்து நகையையும், பணத்தையும் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

தொடர் திருட்டு பொதுமக்கள் அச்சம்

இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. போலீசார் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் வசிப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பெரம்பலூரில் தொடர் திருட்டு, சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்