விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு கட்டுப்பாடு: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
விநாயகர் சிலை ஊர்வலத்தில் அசம்பா விதம் நடந்தால் விழா ஏற்பாட்டாளரே பொறுப்பு, அரசியல் கட்சிக்கு ஆதரவாக பேனர் வைக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப் பாடுகளை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் வெகு விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது.
சிலை ஊர்வலம்
தமிழகத்தில் இந்து அமைப்புகள், கோவில் நிர்வாகங்கள் சார்பில் பொது இடங்களில் விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன.
இவ்வாறு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம் வருகிற 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. மற்ற ஊர்களிலும் குறிப்பிட்ட தேதியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சிலை வைக்க அனுமதி கேட்டு மனு
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் புழுதிபட்டியை சேர்ந்த சந்திரசேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'புழுதிப்பட்டி சத்திரம்பீரான்பட்டி ஊராட்சியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அங்குள்ள பாலதண்டாயுதபாணி கோவில் அருகில் விநாயகர் சிலை வைப்பதற்கும், சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இதேபோல மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி கோரி மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
கட்டுப்பாடுகள்
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது வழக்கின் தன்மையை பொறுத்து, அந்தந்த போலீஸ் நிலைய அதிகாரிகள் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலமாக செல்லவும் அனுமதி வழங்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதி விதித்த கட்டுப்பாடுகள் பற்றிய விவரம் வருமாறு:-
நடனம்
* விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் எந்த விதமான ஆபாச நடனமோ, பேசுவதிலோ ஈடுபடக்கூடாது.
* எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிட்டு நடனம் அல்லது பாடல்கள் எதுவும் இசைக்கக்கூடாது.
பேனர் கூடாது
* எந்த அரசியல் கட்சிக்கும் அல்லது மத தலைவருக்கும் ஆதரவாக பேனர்கள் வைக்கக்கூடாது.
* மதம் அல்லது மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் இருக்கக்கூடாது.
* விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது பங்கேற்பவர்கள் எந்த விதமான போதை பொருட்களையோ, மதுபானங்களையோ உட்கொள்ளக்கூடாது.
ஏற்பாட்டாளர்தான் பொறுப்பு
* ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், மனுதாரர் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள்தான் பொறுப்பாவார்கள்.
* விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் ஏதேனும் ஒன்றை மீறினால், சட்டப்படி தேவையான நடவடிக்கையை எடுத்து, அத்தகைய திருவிழாவை நிறுத்துவதற்கு, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படலாம்.
இந்த கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல உரிய அனுமதியை போலீசார் வழங்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆலோசனை
இதற்கிடையே விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு காணொலி மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கமிஷனர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
இதில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, 'தமிழக அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு உள்ளதா? என்பதை கண்காணிக்க வேண்டும். விநாயகர் சிலைகள் ஊர்வலம் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் அமைதியான முறையில் நடைபெறும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்' என்று போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஒரு லட்சம் போலீசார்
மேலும் அவர், 'பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீஸ் துறையினருடன் ஆயுதப்படை போலீசார், 10 ஆயிரம் பயிற்சி போலீசார், தற்போது பயிற்சியை நிறைவு செய்துள்ள 926 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஊர்காவல் படையினரையும் ஈடுபடுத்த வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதுகாப்பில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசாரும், சென்னையில் 15 ஆயிரம் போலீசாரும் ஈடுபட உள்ளனர்.
5 நாட்களுக்குள்...
விநாயகர் சிலைகள் 10 அடிக்கு மேல் இருக்க கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிலைகளை நிறுவுவதற்கு போலீசார் அனுமதி வழங்கியது போன்று விநாயகர் சிலை ஊர்வலத்துக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
* பொது இடங்களில் நிறுவப்படும் விநாயகர் சிலைகள் 5 நாட்களுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ள நீர் நிலைகளில் கரைக்க எடுத்து செல்ல வேண்டும்.
* விநாயகர் சிலைகள் ஊர்வலம் மதியம் 12 மணிக்குள் தொடங்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து பாதிக்காத வகையில் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடம் வழியாக செல்ல வேண்டும். மசூதி, தேவாலயங்கள் ஆகிய பிற வழிபாட்டுத்தலங்கள் வழியாக செல்லும்போது போலீசார் வழிகாட்டுதல்படி ஏற்படுத்தி தரப்படும் வழித்தடத்தில் சிலைகளை எடுத்து செல்வதற்கு விழா ஏற்பாட்டாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
பட்டாசு வெடிக்க தடை
* விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கு மினி லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களை பயன்படுத்த வேண்டும். மாட்டு வண்டி, மீன்பாடி வண்டி, ஆட்டோ போன்ற வாகனங்களில் சிலைகளை எடுத்து செல்ல அனுமதி இல்லை.
* விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் வாகனங்களில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றக்கூடாது. இதனை மீறினால் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
* விநாயகர் சிலைகள் நிறுவிய இடங்கள், ஊர்வலம் செல்லும் பாதைகள், சிலைகள் கரைக்கும் பகுதியில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை.
* விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு முன்பு சிலைகளில் அணிவிக்கப்பட்டுள்ள துணிகள், பிளாஸ்டிக்கால் ஆன பொருட்கள், பூஜை பொருட்களை முற்றிலும் அகற்ற வேண்டும்.
மேற்கண்டவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.