மீனவ சமுதாயத்தை பழங்குடி வகுப்பில் சேர்க்க தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

மீனவ சமுதாயத்தை பழங்குடி வகுப்பில் சேர்க்க வேண்டும் என ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-04-14 18:59 GMT

தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் திராவிட கழகம் சார்பாக தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதற்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். மாநாட்டில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சமூகத்தில் மிகவும் பின்தங்கி இருக்கும் மீனவ சமுதாயத்தை பழங்குடி வகுப்பில் சேர்க்க வேண்டும். மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகையை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும். மழைக்கால நிவாரணத் தொகையை 6 ஆயிரமாக வழங்க வேண்டும்.

கச்சத்தீவை மீட்க வேண்டும்

இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீட்டு மீனவர்கள் நிம்மதியாக தொழில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதையும், படகுகள் சேதப்படுத்துவதையும் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை அரசு வசமுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை மீட்டு மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், சேதம் அடைந்த விசைப்படகுக்கு நிவாரணத்தொகையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.

மீனவர்களுக்கு தற்போது மானிய டீசல் மாதத்திற்கு 1,800 லிட்டர் வழங்கப்படுகிறது அதனை 2,500 லிட்டராக உயர்த்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை அமைச்சர் மெய்யநாதன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன், தி.மு.க. தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர் பரணி கார்த்திகேயன், திராவிட கழகம் துணைத் தலைவர் பூங்குன்றன் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மீனவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் திராவிட கழக பொதுச் செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்