காவல்துறை சிறப்பு குறைதீர்வு முகாமில் 120 மனுக்களுக்கு தீர்வு

குடியாத்தத்தில் காவல்துறை சார்பில் நடந்த சிறப்பு குறைதீர்வு முகாமில் பொதுமக்களிடம் பெறப்பட்ட 120 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. முகாமின்போது தி.மு.க.பிரமுகர் மீது அ.தி.மு.க.சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

Update: 2023-09-02 12:42 GMT

குடியாத்தம்

குடியாத்தத்தில் காவல்துறை சார்பில் நடந்த சிறப்பு குறைதீர்வு முகாமில் பொதுமக்களிடம் பெறப்பட்ட 120 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. முகாமின்போது தி.மு.க.பிரமுகர் மீது அ.தி.மு.க.சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

குறைதீர்வு முகாம்

குடியாத்தம் துணை கோட்ட காவல்துறை சார்பில் குடியாத்தம் செதுக்கரை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குடியாத்தம் நகரம், குடியாத்தம் கிராமிய, கே.வி.குப்பம், பேரணாம்பட்டு, அனைத்து மகளிர், பரதராமி, மேல்பட்டி ஆகிய காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, பாலசுப்பிரமணியம், சியாமளா, செந்தில்குமாரி, முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

அ.தி.மு.க.சார்பில் மனு

முகாமில் குடியாத்தம் அ.தி.மு.க. நகர செயலாளர் ஜே.கே.என்பழனி தலைமையில் அ.தி.மு.க.வினர் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர்் ஜெயலலிதா, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியிட்ட தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்னரும் இதேபோன்று புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என தெரிவித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அப்போது மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.மூர்த்தி, எஸ்.அமுதா, வழக்கறிஞர்கள் வி.ரஞ்சித்குமார், கே.இளங்கோ உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

புகார்களை பெற்றுக்கொண்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

120 மனுக்கள்

முகாமில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுக்கள், குடும்பத் தகராறு, சொத்து பிரச்சனை, பணமோசடி, கணவன் மனைவி தகராறு, நிலத்தகராறு உள்ளிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்த பல்வேறு மனுக்கள் என 120 மனுக்கள் மீது இருதரப்பினர் முன்னிலையில் விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது.

மேலும் ஏராளமான மனுக்கள் முகாமில் பொதுமக்களிடம் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்