சேலம் மாநகராட்சி கூட்டத்தில்கலைஞர் உரிமைத்தொகை வழங்கிய முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் கலைஞர் உரிமைத்தொகை வழங்கிய முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சேலம்
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் கலைஞர் உரிமைத்தொகை வழங்கிய முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாநகராட்சி கூட்டம்
சேலம் மாநகராட்சியின் இயல்பு கூட்டம் நேற்று மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. துணை ஆணையர் அசோக்குமார், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-
இமயவர்மன் (வி.சி.க.):- தூய்மை பணியாளர்களுக்கு ரூ.650 ஊதியம் வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த ஊதியத்தை கோவையில் நடைமுறைப்படுத்தி விட்டனர். ஆனால் சேலம் மாநகராட்சியில் ரூ.350 கொடுக்கப்படுகிறது. எனவே அரசு அறிவித்துள்ள ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும். இதுதொடர்பாக கோரிக்கை அடங்கிய அட்டையை கையில் ஏந்தியபடி அமர்ந்திருந்தார்.
குளறுபடி
செல்வராஜ் (அ.தி.மு.க.) :-
வரி விதிப்பில் ஏ.பி.சி.டி. என 4 நிலையில் இருந்து கடந்த ஆண்டு முதல் ஏ.பி.சி. என 3 நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது அனைத்து சாலை பகுதிகளும் ஏ பிரிவாக மாற்றப்பட்டு வரி விதிக்கப்படுகிறது. சித்தர்கோவில் மெயின் ரோடும், 5 ரோடும் எப்படி ஒரே மதிப்பை பெற முடியும். எனவே குழு அமைத்து மதிப்பீடு செய்வதில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்.
தெய்வலிங்கம் (தி.மு.க.) :- ஓட்டல்களில் உணவை பார்சலில் வாங்கி சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும் அந்த பிளாஸ்டிக்குகள் சாக்கடை கால்வாய்களில் வீசப்படுவதால் அடைப்பு ஏற்படுகிறது. எனவே ஓட்டல்களில் பிளாஸ்டிக் பார்சல் கவர்களை தடுக்க வேண்டும். பாத்திரங்களில் உணவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்கள் மகிழ்ச்சி
ஈசன் இளங்கே (தி.மு.க.) :-
மகளிர் உரிமைத்தொகையை தமிழக முதல்-அமைச்சர் 1.6 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கி உள்ளதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
எதிர்கட்சி தலைவர் யாதவமூர்த்தி பேசும்போது, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட பழமையான கட்டிடத்துக்கு கூட மறுபடியும் அளந்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு வரியை உயர்த்த கூடாது. ஆங்காங்கே பேட்டரி வாகனம் பழுதடைந்து நிற்கிறது. இதனை மறு சுழற்சி அல்லது ஏலம் விட வேண்டும்.
இதற்கு மேயர் ராமச்சந்திரன் பதில் அளித்து பேசும் போது, பேட்டரி வாகனம் பிரச்சினையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தீர்வு கிடைத்த பின்பே அவற்றை ஏலம் விடவோ, மறு சுழற்சி செய்யவோ முடியும் என்றார்.
அ.தி.மு.க. வெளிநடப்பு
தொடர்ந்து யாதவமூர்த்தி பேசும் போது, அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா உணவகம், விலையில்லா மடிக்கணினி, தாலிக்கு தங்கம், அம்மா குடிநீர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதனை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது என்று கூறினார். இதுதொடர்பாக தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து எங்களை பேசுவதற்கு அனுமதிக்கவிடவில்லை என்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கலைஞர் உரிமைத்தொகை வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது, மாநகரில் கழிவுகளை முறையாக அகற்றாமல் இருந்தால், குப்பைகளை தரம் பிரித்து வழங்காமல் இருந்தால் வீடுகளுக்கு ரூ.50, வணிக நிறுவனங்களுக்கு ரூ.500 அபராதம் விதிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.