பாலம் கட்டும் பணிக்கு ஏரியில் இருந்து மண் அள்ள எதிர்ப்பு:லாரிகளை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

பாலம் கட்டும் பணிக்கு ஏரியில் இருந்து மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-25 18:45 GMT


விழுப்புரம் ஜானகிபுரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஜானகிபுரம் பகுதியில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணிக்காக விழுப்புரம் அருகே சோழனூர் கிராமத்தில் உள்ள ஏரியில் வண்டல்மண் அள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆழத்திற்கு வண்டல்மண் அள்ளப்படுவதாக கூறி சோழனூர் கிராம மக்கள் பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மழை பெய்த போதிலும் அதை பொருட்படுத்திக்கொள்ளாமல், தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், காணை போலீஸ் இன்பெக்டர் செல்வராஜ், சப்-இன்பெக்டர் பாஸ்கர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, கிராம மக்கள் 75 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் ஏற்கனவே 50 ஏக்கர் அளவுக்கு மண் எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 30 அடி ஆழம் வரைக்கும் மண் அள்ளப்பட்டு வருகிறது. இதனால், உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். கால்நடைகள் ஏரிக்கு தண்ணீர் குடிக்க வந்தால் கூட தவறி விழுந்து இறக்க கூடும். எனவே இங்கு மண் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையேற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்