திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஆர்.லால்வேனா, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம், ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளையும் ஆய்வு செய்தார்.
இதையொட்டி தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், வீரை ஊராட்சி, கைக்குடி நடுநிலைப்பள்ளியில் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையல் அறைக்கூடம், ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடம், வேளாண்மைத்துறையின் சார்பில், தேவகோட்டை வட்டாரத்திற்குட்பட்ட வெண்ணியூர் மற்றும் விளாங்காட்டூர் ஆகிய பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நெல்பயிர் சாகுபடி நிலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது, சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை தரமான முறையில், விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆர்.லால்வேனா அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், இணை இயக்குனர் தனபால் (வேளாண்மைத்துறை), ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் வெண்ணிலா, வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.