தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நிறைவு: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா
தென் மாவட்டங்களில் பால் விநியோகம் சீராகி உள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறினார்.;
சென்னை,
தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தென் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்து அவர் கூறியதாவது;
"தென் தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப்பணிகள் நிறைவடைந்துள்ளது. மீட்புப்பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மாநில பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். தென் மாவட்டங்களில் 3,400 பேர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 49,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் சமுதாய சமையல் கூடங்கள் மூலம் உணவு தயாரித்து வழங்குகிறோம். இதுவரை 5 லட்சம் உணவு பொட்டலங்கள் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளன.
மழை, வெள்ளத்தால் தென் மாவட்டங்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 3,500 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன.
தென் மாவட்டங்களில் பால் விநியோகம் சீராகி உள்ளது. தென் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, தென்காசியில் அனைத்து நியாய விலைக்கடைகளும் செயல்படத் தொடங்கியுள்ளன."
இவ்வாறு அவர் கூறினார்.