3-வது மணல் திட்டில் தவித்த 8 அகதிகள் மீட்பு
தனுஷ்கோடி அருகே 3-வது மணல் திட்டில் தவித்த 4 குழந்தைகள் உள்ளிட்ட 8 அகதிகள் மீட்கப்பட்டனர்.
ராமேசுவரம்,
தனுஷ்கோடி அருகே 3-வது மணல் திட்டில் தவித்த 4 குழந்தைகள் உள்ளிட்ட 8 அகதிகள் மீட்கப்பட்டனர்.
கடும் பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் தமிழகத்திற்கு 133 பேர் அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ராமேசுவரம் தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள மணல் திட்டில் அகதிகள் தவித்து வருவதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இவர்கள் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர் கப்பல் மூலம் மணல் திட்டில் தவித்த அகதிகளை மீட்பதற்காக ஹோவர்கிராப்ட் கப்பலில் புறப்பட்டனர். தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த கப்பல் திடீரென பழுதானது.
8 அகதிகள் ஒப்படைப்பு
இதை தொடர்ந்து பழுதான கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் விரைந்து சரி செய்து பின்னர் தனுஷ்கோடி நடுக்கடல் பகுதியில் உள்ள 3-வது மணல் திட்டிற்கு சென்றனர். அங்கு தவித்த 4 குழந்தைகள் உள்பட 8 அகதிகளை மீட்டு கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர். 8 அகதிகளிடமும் கடலோர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நல்லுசாமி உள்ளிட்ட மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் இலங்கை திரிகோணமலை பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் சிவராஜன்(வயது 35), இவருடைய மனைவி நிஷாந்தி(30,) குழந்தைகள் தீபிகா (9), தீட்ஷிகா(7). மற்றொரு குடும்பத்தை சேர்ந்த திரிகோணமலை பகுதியில் இருந்து வந்த கந்தசாமி சந்திரகுமார்(36), இவரது மனைவி மேரி சித்ரா (36) குழந்தைகள் வேணுஜன் (7), 2 மாத குழந்தை என மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் அகதிகளாக வந்தது தெரியவந்தது. அகதிகள் 8 பேரும் மண்டபம் கடலோர காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.