சாமியார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ வெண்கல சிலை மீட்பு

கோவை உக்கடத்தில் சாமியார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ வெண்கல சிலையை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-11-04 18:45 GMT

உக்கடம்

கோவை உக்கடத்தில் சாமியார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ வெண்கல சிலையை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரகசிய தகவல்

கோவை உக்கடம் பேரூர் பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர சுவாமிகள் (வயது 45). இவர் தனது வீட்டில் ஜோதிடம் பார்த்து வருகிறார். அத்துடன் அவர் சாமி சிலைகளையும் செய்து விற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருடைய வீட்டில் 300 கிலோ எடை கொண்ட முருகர் சிலை இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகர் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று பாஸ்கர சுவாமிகள் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு 3 மணி நேரத்துக்கும் மேல் சோதனை நடத்தப்பட்டது.

300 கிலோ சிலை

இந்த சோதனையின்போது 4 அடி உயரம் கொண்ட 300 கிலோ எடை கொண்ட முருகர் சிலை மற்றும் சிலையை வைக்க பயன்படுத்தும் திருவாச்சி ஆகியவற்றை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த சிலையை மீட்டனர்.

இது பற்றி விசாரித்த போது, அந்த சிலையை தான் செய்து வைத்து உள்ளதாக சாமியார் தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த சிலை மற்றும் திருவாச்சி ஆகியவற்றை அங்கிருந்து கோவை காந்திபுரத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு எடுத்துச்சென்றனர்.

தீவிர விசாரணை

இது குறித்து போலீசார் கூறும்போது, சாமியார் வீட்டில் இருந்து மீட்கப்பட்டது வெண்கல சிலை ஆகும். அதை விற்பனைக்காக வைத்து இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. அந்த சிலையை அவர்தான் செய்தாரா அல்லது வேறு எங்கிருந்தும் வாங்கி வந்தாரா அல்லது கோவிலில் இருந்து எடுக்கப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்