சூடானில் சிக்கி தவித்த 247 தமிழர்கள் மீட்பு - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
சூடானில் இருந்து இதுவரை 247 தமிழர்கள் மீட்கப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.;
சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை ஆபரேஷன் காவிரி திட்டத்தின் மூலம் மத்திய அரசு மீட்டு அழைத்து வருகிறது.
சூடானில் இருந்து மீட்கப்படும் தமிழர்களை, தமிழ்நாடு அரசின் செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அயலக தமிழர் நலவாழ்வுத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் சூடானில் இருந்து மீட்கப்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 12 தமிழர்கள் மும்பை, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.
சென்னை விமான நிலையம் வந்த அவர்களை, அமைச்சர் செஞ்சி மஸ்தான், கலாநிதி வீராசாமி எம்.பி. ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:-
சூடான் நாட்டில் இருந்து இதுவரை 247 தமிழர்கள் மீட்கப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் சில தமிழர்கள் அங்கு சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்த தகவல்களை சேகரித்து அவர்களை மீட்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டு அவர்களது வீடு சென்று சேரும் வரை முழு செலவையும் தமிழக அரசு ஏற்று கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மீட்கப்பட்டவர்களில் ஒருவரான சென்னையை சேர்ந்த அனுபிரியா கூறும்போது, "எங்களை பத்திரமாக மீட்டு அழைத்து வந்த தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி. சூடானில் போர் நடப்பதால் எப்படி இந்தியா திரும்புவோம் என பயந்து இருந்தோம். வீட்டில் வெடிகுண்டு சத்தம் கேட்டுதான் கண் விழித்தோம். நகரை விட்டு புறநகர் பகுதிக்கு சென்றோம். உணவு, குடிநீர் கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். தூதரக அதிகாரிகள் மூலம் நாங்கள் மீட்கப்பட்டோம்" என்றார்.
திருவள்ளூரை சேர்ந்த ரமேஷ் கூறும்போது, "சூடானில் இருந்து அழைத்து வர உதவிய தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி. எங்களை வீடு வரை பத்திரமாக அழைத்து செல்ல உதவிய அதிகாரிகளுக்கும் நன்றி. மின்சாரம், உணவு, தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டோம். பயந்து போய் இருந்தோம். நல்லபடியாக தமிழகம் வந்து சேர்ந்து உள்ளோம்" என்றார்.
பின்னர் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு கார்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.