திங்களூர் அருகே 120 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்த மாணவி; தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்

திங்களூர் அருகே 120 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மாணவியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

Update: 2022-10-10 20:35 GMT

திங்களூர் அருகே 120 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மாணவியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

கிணற்றுக்குள் விழுந்தார்

ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே உள்ள சின்னாளம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். விவசாயி. இவருடைய மகள் மதுமிதா (வயது 15). பெருந்துறையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று காலை மதுமிதா வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்து கிணறு அருகே சென்று அங்கிருந்த மின் மோட்டாரை இயக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் இடறி 120 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.

கிணற்றுக்குள் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது. அந்த தண்ணீரில் காய்ந்து போன வாழை மரங்கள் மிதந்து கொண்டிருந்ததால், அவைகளை பிடித்துக்கொண்டு நீரில் மூழ்காமல் தத்தளித்தபடி இருந்த மதுமிதா, காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினார்.

தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

மதுமிதாவின் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அவரது தந்தை மோகன்ராஜ் மகளை காப்பாற்ற கிணற்றுக்குள் இறங்க முயன்றார். ஆனால் முடியவில்லை. உடனே பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்கள். பின்னர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரில் தத்தளித்த மதுமிதாைவ பத்திரமாக மேலே கொண்டு வந்தார்கள். கிணற்றுக்குள் விழுந்தபோது மதுமிதாவுக்கு வலது காலில் காயம் பட்டிருந்தது. இதனால் அவர் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்